ராயப்பேட்டையில், தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த நண்பர்


ராயப்பேட்டையில், தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த நண்பர்
x
தினத்தந்தி 9 Dec 2019 4:45 AM IST (Updated: 9 Dec 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

ராயப்பேட்டையில், தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த அவருடைய நண்பர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை ராயப்பேட்டை பெசன்ட் சாலையைச் சேர்ந்தவர் நாசர் (வயது 38). இவர், பர்னிச்சர் பொருட்களை பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. மனைவி பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. நாசரின் நண்பர் பெயர் அலிசார்(35). இவருக்கும் திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது.

அலிசார், ராயப்பேட்டை ஹைதர் அலிகான் தெருவில் வசித்து வருகிறார். நேற்று இரவு அலிசாரும், நாசரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தினர். போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

அப்போது நாசர், அலிசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் கோபம் அடைந்த அலிசார், தனது வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து நாசரை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. அலிசாரின் வீட்டுக்கு அருகேயே இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.

கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த நாசர், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். நண்பரை தீர்த்து கட்டிவிட்டு போதையில் இருந்த அலிசார், தப்பி ஓடாமல் தனது வீட்டிலேயே இருந்தார். இதற்கிடையில் இந்த தகவல் கிடைத்து திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமிஷனர் தர்மராஜன், உதவி கமிஷனர் சரவணன் உள்ளிட்ட போலீஸ் படையினர் விரைந்து சென்று விசாரித்தார்கள்.

நாசரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அண்ணாசாலை போலீசார் இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்தனர். வீட்டில் இருந்த அலிசார் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நேற்று இரவு ராயப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story