மாவட்ட செய்திகள்

புதுவையில் பயங்கரம்: அரசு ஊழியர் வெட்டிக் கொலை - போலீசில் 3 பேர் சிக்கினர் + "||" + Terror in the puduvai Government Employee Kill the cut

புதுவையில் பயங்கரம்: அரசு ஊழியர் வெட்டிக் கொலை - போலீசில் 3 பேர் சிக்கினர்

புதுவையில் பயங்கரம்: அரசு ஊழியர் வெட்டிக் கொலை - போலீசில் 3 பேர் சிக்கினர்
புதுவையில் ஓடஓட விரட்டி அரசு ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3பேர் பிடிபட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி, 

புதுவை வைத்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகு என்கிற லோகநாதன்(வயது 52). பொதுப்பணித்துறை ஊழியர். இவருக்கு சுகுணா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். லோகநாதன் தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார்.

இதையொட்டி தினமும் காலையில் எழுந்து குளித்து விட்டு மணக்குள விநாயகர் கோவிலுக்கு செல்வது வழக்கம். நேற்று அதிகாலை கோவிலுக்கு புறப்பட்டார். குருசுக்குப்பம் மாதா கோவில் அருகே வந்த போது முகமூடி அணிந்த ஒரு கும்பல் லோகநாதனை திடீரென வழிமறித்தது.

இதைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டபடி ஓட்டம் பிடித்தார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சுற்றி வளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டித்தள்ளினர். இதில் லோகநாதனுக்கு தலை, கை உள்பட உடலில் பல இடங்களில் சரமாரியாக வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். லோகநாதன் இறந்ததை உறுதி செய்த பிறகே அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. காலை நேரத்தில் அங்கு பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது. கண்முன் நடந்த இந்த கொலையை பார்த்து அவர்கள் சிதறி ஓடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டு மாறன், முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

லோகநாதன் கொலை செய்யப்பட்டது குறித்து தெரியவந்ததும் உறவினர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கொலை நடந்த இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் முத்தியால்பேட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்ததை ஏற்று மறியல் கைவிடப்பட்டது.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு வைத்திக்குப்பத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் பாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழியாக லோகநாதனை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் பாண்டியனின் மகன் கோகுல் மற்றும் அவரது நண்பர்கள் சதீஷ், அருண்பாண்டி, வினோத் உள்பட 9 பேர் சேர்ந்து லோகநாதனை கொலை செய்தது தெரியவந்தது.

இந்த பயங்கர சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், கார்த்தி்கேயன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் போலீஸ் பிடியில் 3 பேர் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்டது ஏன்?

கடந்த 6.4.2018 அன்று குருசுக்குப்பம் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் பாண்டியன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் கைதானவர்களை ஜாமீனில் எடுப்பது உள்பட பல்வேறு உதவிகளை லோகநாதன் செய்து வந்துள்ளார். எனவே இதற்கு பழிக்குப்பழியாக தன்னை கொலை செய்ய பாண்டியன் தரப்பினர் திட்டமிட்டிருப்பதுபற்றி லோகநாதனுக்கு முன்கூட்டியே தெரியவந்துள்ளது. இதனால் வெளியில் அதிகம் நடமாடாமல் பணிக்கு செல்லும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அவர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊர்பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. அப்போது பாண்டியன் தரப்பினர் லோகநாதன் மீது எந்த விதமான விரோதமும் காட்டக்கூடாது என்று பேசி முடிக்கப்பட்டது. இதையும் மீறி நேற்று லோகநாதன் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமையை தேர்வு செய்த கொலையாளிகள்

செஞ்சி- ஆம்பூர் சாலை இடையே மணக்குள விநாயகர் கோவில் சந்திப்பில் காங்கிரஸ் பிரமுகர் பாண்டியன் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலையில் கொலை செய்யப்பட்டார். அந்த நாளில் இருந்து கொலை சம்பவம் நடந்த இடத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பூ, பழங்கள், மது பாட்டில் வைத்து அதிகாலையில் யாரோ பூஜைகள் நடத்தி விட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில் அதே ஞாயிற்றுக்கிழமையை தேர்ந்தெடுத்து அதிகாலையில் லோகநாதன் கொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. வில்லியனூர் அருகே பயங்கரம்: சாராயக்கடை ஊழியர் வெட்டிக் கொலை போலீசில் ஒருவர் சிக்கினார்
வில்லியனூர் அருகே சாராயக் கடை ஊழியரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
2. மீஞ்சூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை - மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
மீஞ்சூர் அருகே நடந்து சென்ற அ.தி.மு.க. பிரமுகரை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றது.
3. சமூக வலைத்தளத்தில் நாராயணசாமி மீது அவதூறு ; அரசு ஊழியர் கைது
வில்லியனூரை அடுத்த உளவாய்க்காலை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 55). புதுவை அரசு ஊழியரான இவர் கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.
4. செங்கல்பட்டில் ரவுடி வெட்டிக்கொலை
செங்கல்பட்டில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...