நாலாட்டின்புத்தூர் அருகே புறவழிச்சாலையில் 4 கார்கள் அடுத்தடுத்து மோதல்; டிரைவர் காயம் போக்குவரத்து பாதிப்பு


நாலாட்டின்புத்தூர் அருகே புறவழிச்சாலையில் 4 கார்கள் அடுத்தடுத்து மோதல்; டிரைவர் காயம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 9 Dec 2019 3:30 AM IST (Updated: 9 Dec 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

நாலாட்டின்புத்தூர் அருகே புறவழிச்சாலையில் 4 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்கு உள்ளானதில் டிரைவர் காயம் அடைந்தார்.

கோவில்பட்டி, 

நாலாட்டின்புத்தூர் அருகே புறவழிச்சாலையில் 4 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்கு உள்ளானதில் டிரைவர் காயம் அடைந்தார். இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாய் குறுக்கே ஓடியது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள புறவழிச்சாலையில் திருச்செந்தூரில் இருந்து புறப்பட்ட ஒரு கார் கடலூரை நோக்கி நேற்று மதியம் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக ஒரு நாய் திடீரென சாலையை கடந்ததாக கூறப்படுகிறது. இதனால் கார் டிரைவர் காரை உடனடியாக நிறுத்தினார்.

கார்கள் அடுத்தடுத்து மோதல்

திடீரென கார் சாலையில் நின்றதால் அதன் பின்னால் வந்த 3 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி நின்றன. இதில் திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு வந்த காரின் டிரைவர் கதிரேசன் மட்டும் லேசான காயம் அடைந்தார். மற்றவர்களுக்கு காயம் இல்லை. இதை தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நாலாட்டின்புத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் சிக்கிய கார்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.

காயம் அடைந்த கதிரேசன் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று ஊர் திரும்பினார். இந்த சம்பவம் குறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story