திருப்பூர் பகுதிகளில் உள்ள 32 இறைச்சிக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர் பகுதிகளில் உள்ள 32 இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாராபுரம் சாலை, கோவில்வழி, ஒத்தகடை, கே.எஸ்.சி.பள்ளி சாலை, நொய்யல் வீதி, பள்ளி வாசல் வீதி, புதுசாலை, காங்கேயம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆட்டு இறைச்சி விற்பனை கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தங்கவேல், கேசவராஜ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
மொத்தமாக 32 ஆட்டு இறைச்சி கடைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த 10 இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
மேலும் அனைத்து இறைச்சி கடை உரிமையாளர்களுக்கும் ஆடுகளை அதற்கென உருவாக்கப்பட்டுள்ள ஆடுவதை கூடத்தில் மட்டுமே வெட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:- ஆடுகளை ஆடுவதை கூடத்தில் மட்டுமே வைத்து வெட்ட வேண்டும். இறைச்சிகளை கண்ணாடி பெட்டிகளில் வைத்து பாதுகாப்புடன் விற்பனை செய்ய வேண்டும். இறைச்சி தொங்க விடப்படும் கொக்கிகள் துருப்பிடிக்காத இரும்பினால் ஆனதாக பயன்படுத்த வேண்டும்.
வெட்டு மரப்பலகைகளை முறையாக சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். இறைச்சி கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். இப்படிப்பட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கடை பிடிக்காத இறைச்சி கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோல் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை ஊழியர்களுடன் குன்னத்தூர் பேரூராட்சி பகுதிகளில் டீக்கடை, உணவகம், சாலையோர இறைச்சிக்கடைகள், பழக்கடை ஆய்வு செய்தார்கள். அப்போது குன்னத்தூர் பஸ்நிலையத்தில் காலாவதியான 10 கிலோ மீன்இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.
Related Tags :
Next Story