மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி: அதிகாரிகளுடன் கவர்னர் கிரண்பெடி ஆலோசனை - இணைந்து செயல்பட அறிவுரை
மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதையொட்டி அதிகாரிகளுடன் கவர்னர் கிரண்பெடி ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் மாநில பேரிடர் ஆணைய இயக்குனர் பங்கஜ்குமார் ஜா, சப்-கலெக்டர்கள் தமிழ்செல்வன், சக்திவேல், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் பஞ்சாயத்து கொம்யூன் ஆணையர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பருவமழை காலத்தில் பாதிக்கப்படும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கவர்னர் கிரண்பெடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிகப்படியான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டனர். இதனைக் கருத்தில் கொண்டு மீதமுள்ள பருவ மழையை எதிர்கொள்ள வேண்டும்.
எனவே பேரிடர் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும். மேலும் வருகிற 27-ந் தேதி காலை 9 மணிக்கு மீண்டும் மறுஆய்வு நடைபெறும். இதில் பொதுப் பணித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, மின்துறை சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் அவர்தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story