குண்டலப்பள்ளி கிராமத்தில் 900 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகற்கள் கண்டுபிடிப்பு


குண்டலப்பள்ளி கிராமத்தில் 900 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகற்கள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 9 Dec 2019 4:00 AM IST (Updated: 9 Dec 2019 4:03 AM IST)
t-max-icont-min-icon

குண்டலப்பள்ளி கிராமத்தில் 900 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பர்கூர்,

கிரு‌‌ஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு, கிரு‌‌ஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பர்கூர் ஒன்றியம் குண்டலப்பள்ளி கிராமத்தில், குழுத்தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில், வரலாற்று குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் 900 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது குறித்து வரலாற்று ஆய்வாளர் சதானந்த கிரு‌‌ஷ்ணகுமார் மற்றும் அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:- இங்குள்ள இரண்டு நடுகற்கள் 900 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அதாவது 11-ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது. முதலாவது நடுகல்லில், ஒரு வீரன் அம்பு எய்வது போல் செதுக்கப்பட்டுள்ளது.

இறந்த வீரன்

அந்த வீரனின் உடலில் 8 இடங்களில் அம்பு பாய்ந்துள்ளது தெளிவாக காட்டப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழன் 33-ம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் அதாவது, 1103-ம் ஆண்டு கால்நடைகள் மீட்பு சண்டையில் இறந்த வீரனுக்காக எடுக்கப்பட்டது. முதலாம் குலோத்துங்க சோழன், 1070-ம் ஆண்டிலிருந்து 1120-ம் ஆண்டு வரை 50 ஆண்டு காலம் சோழ நாட்டை ஆண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் காலத்தில் இப்பகுதி சோழர் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த நடுகல்லில் வீரனின் இடதுபுறம் மேற்பகுதியில் இரு தேவமங்கையர் வீரனை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் கீழ் பகுதியில் மாடு, ஆடு, மான் ஆகிய வளர்ப்பு விலங்குகள் தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளன. கால்நடைகளை மீட்பதற்காக நடந்த சண்டையில் வீரன் இறந்தான் என்ற செய்தியை இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.

புலிக்குத்திப்பட்டான் கல்

இதன் அருகே புலிக்குத்திப்பட்டான் கல் ஒன்று தெலுங்கு மொழி கல்வெட்டுடன் காணப்படுகின்றது. கால்நடைகளை காக்க புலியுடன் போரிட்டு இறந்த வீரனுக்காக இந்த நடுகல் வைக்கப்பட்டுள்ளது. இதுவும் 900 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இந்த பகுதியில் உள்ள நிலத்தில் 11-ம் ஆண்டு நூற்றாண்டு கால லிங்கமும், நந்தி சிலையும் கிடைக்கப்பெற்று வழிபாட்டில் உள்ளது. இந்தகோவிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட கிணறு ஒன்று உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வு பணியின் போது ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், டேவீஸ், கணேசன், சரவணகுமார் ராமச்சந்திரன், அருண் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story