தாளவாடி அருகே, குண்டும் குழியுமான சாலையால் 2 அரசு பஸ்கள் நிறுத்தம் - மலைக்கிராம மக்கள் அவதி


தாளவாடி அருகே, குண்டும் குழியுமான சாலையால் 2 அரசு பஸ்கள் நிறுத்தம் - மலைக்கிராம மக்கள் அவதி
x
தினத்தந்தி 10 Dec 2019 3:45 AM IST (Updated: 9 Dec 2019 8:09 PM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே குண்டும் குழியுமான சாலையால் 2 அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு்ள்ளது. இதனால் மலைக்கிராம மக்கள் அவதியடைந்தனர்.

தாளவாடி, 

தாளவாடி ஒன்றியத்துக்கு உள்பட்டது கேர்மாளம் ஊராட்சி. இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்தது.

எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதை ஏற்று பிரதம மந்திரி கிராமசாலைகள் திட்டத்தின் கீழ் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கே.ஆர்.எஸ்.புரத்தில் இருந்து சுஜில்கரை வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. ரோடு தோண்டப்பட்டு ஜல்லி கற்கள் மட்டுமே கொட்டப்பட்டது.

அதன்பின்னர் சாலை சீரமைக்கப்படவில்லை. கடந்த 2 மாதமாக பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு இருப்பதால் அவ்வழியாக பஸ், இருசக்கர வாகனம் உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. தட்டுத்தடுமாறி கீழே விழுந்து விபத்துகளை சந்தித்து வருகின்றனர்.

சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர், சுஜில்கரை வழியாக கே.ஆர்.எஸ்.புரம் வரை காலை, மதியம், மாலை ஆகிய நேரங்களில் 2 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. சாலை சீரமைக்கப்படாததால் தற்போது அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டு் உள்ளன. இதனால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள். பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். செல்போன் சேவை கூட இல்லாத இந்த மலைக்கிராமங்களில் தற்போது பஸ்களும் நிறுத்தப்பட்டது மலைக்கிராம மக்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கி உள்ளது.

இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறும்போது, ‘பஸ்கள் நிறுத்தப்பட்டதால் செல்ல வேண்டிய இடங்களை உரிய நேரத்தில் அடைய முடிவதில்லை. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் உயிரை பணயம் வைத்து நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே கிடப்பில் போடப்பட்டு உள்ள சாலை சீரமைப்பு பணியை முடித்து, நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story