நெல்லை அருகே சிற்றாறு பாசனத்தில் பராக்கிரம பாண்டியன் குளத்தின் கால்வாயை தூர்வார வேண்டும் - கலெக்டரிடம், விவசாயிகள் மனு


நெல்லை அருகே சிற்றாறு பாசனத்தில் பராக்கிரம பாண்டியன் குளத்தின் கால்வாயை தூர்வார வேண்டும் - கலெக்டரிடம், விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 10 Dec 2019 4:00 AM IST (Updated: 9 Dec 2019 10:46 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே சிற்றாறு பாசனத்தில் உள்ள பராக்கிரம பாண்டியன் குளத்தின் கால்வாயை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

நெல்லை, 

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ‌ஷில்பா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனு வாங்கினார். அனைத்தலையூர், வடகரை மற்றும் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த விவசாயிகள், ஊர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை அருகே கங்கைகொண்டான் கிராமத்தில் பராக்கிரம பாண்டியன் குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் 1,500 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. பராக்கிரம பாண்டியன் குளத்துக்கு சிற்றாறு வெள்ளத்தின் மூலம் நீர்வரத்து உள்ளது. மேலும் அந்த பகுதி மானாவாரி தண்ணீரும் நீர்வரத்து பகுதியாக உள்ளது. தற்போது சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும் பராக்கிரம பாண்டியன் குளத்துக்கு ஒருசொட்டு தண்ணீர் கூட கால்வாய் மூலம் வரவில்லை.

இதற்கு குளத்துக்கு சிற்றாற்றில் இருந்து வெள்ளநீர் வருகின்ற கால்வாய் தூர்வாரப்படாமல் புதர்களாகவும், கருவேல மரங்கள் நிறைந்தும் இருப்பதே காரணம் ஆகும். மேலும் சிற்றாற்றில் இருந்து தண்ணீர் வரும் வழியில் உள்ள சித்தார்சத்திரம் குளத்தின் மதகு அடைக்கப்பட்டு கீழ்குளமாக உள்ள எங்களது குளத்துக்கு தண்ணீர் வராமல் தடுக்கப்பட்டு உள்ளது. சன்னதுபுதுக்குடி குளத்தின் மறுகாலின் உயரத்தை காங்கிரீட் சுவர்களால் உயர்த்தி கட்டிவிட்டதால் அந்த குளத்தில் இருந்து உபரி நீர் வருவதும் தடுக்கப்பட்டுள்ளது. எனவே சிற்றாற்றில் வெள்ளநீர் வீணாக கடலுக்கு செல்வதை தவிர்த்து பராக்கிரம பாண்டியன் குளத்தின் கால்வாயை உடனடியாக தூர்வாரி குளத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ராஜபதி கிராமத்தில் 700 குடும்பங்கள் வசித்து விவசாய பணிகள் செய்து வருகிறோம். கங்கைகொண்டான் ஊராட்சி மூலம் கடந்த அக்டோபர் மாதம் ராஜபதி முதல் வெங்கடாச்சலபுரம் செல்லும் ரோட்டில் புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பாலம் தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

புதிய பாலத்தின் அடியில் உள்ள கால்வாயின் மூலம் கங்கைகொண்டான் சிறுகுளத்துக்கு சிற்றாறின் வெள்ளநீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் பாலத்தின் மேல்புறம் வழியாக வெள்ளநீர் எங்கள் கிராமத்தில் புகுந்து விட்டது. 20 வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. எனவே இவ்வாறு ஊருக்குள் தண்ணீர் வருவதை தடுக்கும் வகையில் புதிய பாலத்தின் மேல்புறம் வெள்ளநீர் தடுப்பு சுவர் மற்றும் படித்துறை கட்ட வேண்டும்’’ என்று கூறிஉள்ளனர்.

நெல்லை அருகே உள்ள ரெட்டியார்பட்டி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ‘‘ரெட்டியார்பட்டி, மூலக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்த மாணவர்கள் பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரியில் படித்து வருகிறோம். நாங்கள் இதுவரை எங்கள் ஊரில் இருந்து நெல்லை சந்திப்புக்கு வருகிற பஸ்சில் பயணம் செய்து சந்திப்பில் இருந்து பேட்டைக்கு செல்வோம். தற்போது சந்திப்பு பஸ் நிலையம் டவுன் பொருட்காட்சி திடலுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தநிலையில் எங்கள் பகுதியில் இருந்து வருகிற 25-ஏ, 25-பி மற்றும் 25-என் உள்ளிட்ட பஸ்கள் பொருட்காட்சி திடல் பஸ் நிலையத்துக்கு செல்லாமல், எங்களை புதிய பஸ் நிலையம் அல்லது வண்ணார்பேட்டையில் இறக்கி விட்டு சென்று விடுகின்றனர். மேலும் சரியான நேரத்துக்கு பஸ்களை இயக்கவில்லை. இதுகுறித்து கேட்டால் டிரைவர், கண்டக்டர் தரக்குறைவாக பேசுகின்றனர். இதனால் நாங்கள் 3 பஸ்களில் பயணம் செய்து கல்லூரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே எங்கள் பகுதியில் இருந்து வருகிற பஸ்களை பொருட்காட்சி திடல் பஸ் நிலையம் வரை முழுமையாக இயக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சேரன்மாதேவி அருகே உள்ள உலுப்படிபாறையை சேர்ந்த ஊர் மக்கள் கொடுத்த மனுவில், ‘‘எங்கள் ஊரில் யூனியன் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 2 ஆசிரியைகள் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ஒரு ஆசிரியை மாறுதலாகி சென்று விட்டார். அவருக்கு பதில் வேறு ஆசிரியை வரவில்லை. எனவே கடந்த 6 மாதங்களாக மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே எங்கள் ஊர் பள்ளிக்கூடத்துக்கு உடனடியாக நிரந்தர ஆசிரியை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லை ராமையன்பட்டி சங்குமுத்தம்மாள்புரத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், சங்குமுத்தம்மாபுரத்தில் 150 ஆண்டுகளுக்கு மேல் பரம்பரையாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. மாநகராட்சி எல்லையில் இருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ள நிலையில், எங்களுக்கும் வீட்டு மனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லை அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தை சேர்ந்த ராசையா தரப்பினர் கொடுத்த மனுவில், ‘‘எங்கள் ஊரில் உள்ள காலி இடத்தை உரிமை கொண்டாடுவது தொடர்பாக 2 மதத்தினர் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. அந்த நிலத்தில் வேலி அமைக்கப்பட்டு உள்ளதால், அங்கு திரும்பி செல்லும் டவுன் பஸ், திரும்ப முடியாமல் ஊருக்கு வெளியே பயணிகளை இறக்கி விட்டு செல்கிறது. எனவே நிலப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்’’ என்று கூறிஉள்ளனர்.

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘‘ராமையன்பட்டி அரசு புதுக்காலனி, சசிநகர், சைமன் நகர், சிவாஜி நகர், பாலாஜி நகர், அன்னை வேளாங்கண்ணி நகர், அக்ரஹாரம், காவலர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையால் ரோடு சேதம் அடைந்து குண்டும், குழியுமாக நடமாட முடியாத அளவுக்கு மோசமாகி விட்டது. எனவே போர்க்கால அடிப்படையில் ரோடுகளை சீரமைக்க வேண்டும்’’ என்று கூறிஉள்ளார்.

அம்பை அருகே உள்ள சிவந்திபுரம் ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்த னர். அதில், ‘‘நாங்கள் கடந்த 2006-ம் ஆண்டு முதல் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு சம்பள சீட்டு, வருடாந்திர ஊதிய உயர்வு உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. மேலும் சீருடை தைக்கும் கூலி, சோப்பு, வேலை செய்யும் உபகரணங்கள், 10 ஆண்டு பணிபுரிந்தவர்களுக்கு தேர்வு நிலை ஊதியம் வழங்க வேண்டும்’’ என்று கூறிஇருந்தனர்.

இதே போல் பல்வேறு தரப்பினர் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

Next Story