நீலகிரி மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது


நீலகிரி மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது
x
தினத்தந்தி 9 Dec 2019 10:30 PM GMT (Updated: 9 Dec 2019 6:25 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி, ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள், 35 கிராம ஊராட்சிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து நேற்று முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. அதனை தொடர்ந்து ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் குறியீடு போடப்பட்டது. உள்ளே மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்பட வில்லை. அலுவலகம் மற்றும் 100 மீட்டர் தொலைவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அங்கு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவி இடங்களுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணியில் இருந்தனர். சிலர் வேட்பு மனு படிவங்களை வாங்கி சென்றனர். அலுவலகம் வெளியே வார்டுகள் வாரியாக இட ஒதுக்கீடு விவரங்கள் அடங்கிய அறிவிப்புகள் ஒட்டப்பட்டன.

வேட்பாளரோ அல்லது அவரது பெயரை முன் மொழிபவரோ ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேற்று முதல் வருகிற 16-ந் தேதி வரை அரசு விடுமுறை அல்லாத நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

இதற்கான மனு படிவங்கள் அனைத்து வேலை நாட்களிலும் கிடைக்கும். ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் வார்டு உறுப்பினர்களின் கூட்டம் வருகிற ஜனவரி மாதம் 11-ந் தேதி ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 5 பேர், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் அரக்கோடு ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒருவர் என மொத்தம் 6 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்து உள்ளனர்.

Next Story