ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி கண்காணிப்பு கேமராவில் பதிவான வாலிபருக்கு வலைவீச்சு


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி கண்காணிப்பு கேமராவில் பதிவான வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Dec 2019 5:00 AM IST (Updated: 9 Dec 2019 11:57 PM IST)
t-max-icont-min-icon

போரூரில் ஏ.டி.எம். எந்தி ரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை போரூரில் மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் கர்நாடகா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்த வாலிபர் ஒருவர், திடீரென ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது ஐதராபாத்தில் உள்ள இந்த ஏ.டி.எம். மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் எச்சரிக்கை மணி ஒலித்தது. உடனடியாக அங்கிருந்து போன் மூலம் போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சங்கர் நாராயணன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

அங்கு ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் பணம் இருந்த பெட்டியை உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் ஏமாற்றத்துடன் தப்பிச்சென்று விட்டது தெரிந்தது. இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்தின் வெளியே நின்று செல்போனில் பேசுகிறார். சிறிது நேரத்தில் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழையும் அவர், அங்குள்ள மின் விளக்குகளை அணைத்து விட்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதும், பணம் உள்ள பெட்டியை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் தப்பிச்செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, மர்ம வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story