சேலம் அருகே என்ஜினீயர் தற்கொலை விவகாரம்: நர்சிங் மாணவியை கடத்தியவர் கைது
சேலம் அருகே என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக, நர்சிங் மாணவியை கடத்தியவர் கைது செய்யப் பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம்,
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 22). என்ஜினீயர். இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த கிருபாகரன் (22). இவர் சேலத்தில் நர்சிங் படித்து வரும் 17 வயது மாணவியை காதலித்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியை அழைத்துக்கொண்டு கிருபாகரன் வீட்டை விட்டு வெளியேறினார். இதுதொடர்பாக சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அவரிடம் மறுநாளும் விசாரணைக்கு வரவேண்டும் என போலீசார் கூறினர். போலீஸ் விசாரணைக்கு பயந்தும், போலீசார் அவதூறாக பேசியதாகவும் கூறி ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு கடந்த 7-ந் தேதி சதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது.
இதனிடையே சதீஷ்குமார் சாவுக்கு போலீசார் தான் காரணம் என்று கூறியும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவருடைய குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரியும், சதீஷ்குமார் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நேற்று முன்தினமும் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.
இதற்கிடையே, தலைமறைவான கிருபாகரன் மற்றும் நர்சிங் மாணவியை பிடிக்க சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், கிருபாகரனின் செல்போன் எண்ைண வைத்து விசாரணை நடத்தினர். அதில், அவர் புதுச்சேரியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், கிருபாகரன் மற்றும் நர்சிங் மாணவியை பிடித்து சேலம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த மாணவிக்கு 17 வயதே ஆவதால் கிருபாகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று போலீசார் கைது செய்தனர். மாணவியை அரசு பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கைதான கிருபாகரன் ஏற்கனவே நெல்லையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஒரு குழந்தை உள்ளது. அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த பெண் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பிறகே அவர் நர்சிங் மாணவியை காதலித்து கடத்தி சென்றுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை 3-வது நாளாக சதீஷ்குமார் உடலை வாங்க மறுத்து அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்டம் நடத்தியவர்கள் கூறுகையில், சதீஷ்குமார் தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவருடைய குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கினால் தான் உடலை பெற்று செல்வோம். அவரை விசாரணைக்கு அழைத்து சென்றபோது போலீஸ் நிலையத்தில் பதிவான காட்சிகளை காண்பிக்க வேண்டும், என்றனர்.
இதைக்கேட்ட போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மதியம் 2 மணியளவில் சதீஷ்குமாரின் உடலை பெற்று சென்றனர்.
இந்த சம்பவத்தால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story