மின்விளக்கை சரிசெய்ய முயன்ற போது பரிதாபம்: மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி


மின்விளக்கை சரிசெய்ய முயன்ற போது பரிதாபம்: மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி
x
தினத்தந்தி 10 Dec 2019 4:15 AM IST (Updated: 10 Dec 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டில் மின்கம்பத்தில் ஏறி மின்விளக்கை சரிசெய்ய முயன்றபோது, மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலியானார்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பெருமாநல்லூர் காலனியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 43). இவர் பள்ளிப்பட்டு நகர மின்வாரியத்தில் (வயர்மேனாக) ஊழியராக வேலை பார்த்து வந்தார். இதற்கு முன்பு குமாரராஜுப்பேட்டை மின்வாரியத்தில் பணியாற்றி சிலமாதங்களுக்கு முன்பு தான் பள்ளிப்பட்டு பகுதிக்கு மாற்றமாகி வந்தார்.

இதனால் பள்ளிப்பட்டு நகரத்தில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர்கள் பற்றிய முழு விவரம் இவருக்கு தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை பள்ளிப்பட்டு பிராமணர் தெருவில் உள்ள வரதநாராயண பெருமாள் கோவில் தெருவில் உள்ள மின்கம்பத்தில் மின்விளக்கை சரிசெய்ய ஏறி உள்ளார்.

அப்போது முனுசாமி உடலில் திடீரென மின்சாரம் பாய்ந்து மின்கம்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த முனுசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முனுசாமி பரிதாபமாக செத்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையின் முன்பு திரண்டனர். மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் அசம்பாவிதம் நடந்ததாக கூறி முனுசாமி உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விடாமல் தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து பள்ளிப்பட்டு போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மறியல் செய்தவர்களுடன் அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதையடுத்து போலீசார் முனுசாமி உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த முனுசாமிக்கு சவுந்தர்யா (40) என்ற மனைவியும், சரவணன் (16) என்ற மகனும் உள்ளனர்.

Next Story