பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சிறுவன் திடீர் சாவு - டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்ட சிறுவன் திடீரென்று இறந்தான். தவறான சிகிச்சையால் அவன் இறந்துள்ளதாகவும், சம்மந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நெல்லை,
நெல்லை கொக்கிரகுளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவருடைய மனைவி பவானி மற்றும் குடும்பத்தினர் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநகர மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் நேற்று கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
பவானி தம்பதிக்கு தனபால் மற்றும் குருபிரசாத் என 2 மகன்கள். இதில் குருபிரசாத் (வயது 8), அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந்தேதி தண்ணீர் குடிக்க முடியாமல் தொண்டை வலியால் அவதிப்பட்டான். உடனடியாக மேலப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றோம். பின்னர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அப்போது அவனுக்கு சரியான பரிசோதனைகள் செய்யாமல், நாய் கடித்து விட்டதாக கூறி ஊசி மருந்து செலுத்தினர். இதனால் அவனது உடல் நிலை மோசம் அடைந்தது.
இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவனை சேர்த்தோம். அங்கு டாக்டர்கள், நாய்கடிக்கான ஊசி போடப்பட்டுள்ளதால் மூளை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர். சிறிது நேரத்தில் குருபிரசாத் இறந்து விட்டான். எனவே குருபிரசாத் இறப்புக்கு காரணமான டாக்டர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. அப்போது தாய் பவானி, மகன் குருபிரசாத் புகைப்படத்துடன் கதறி அழுதவாறு கண்ணீருடன் காணப்பட்டார். அவரை கலெக்டர் மற்றும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story