திருவள்ளூர் மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் முதல் நாளில் 177 பேர் வேட்பு மனுத்தாக்கல்


திருவள்ளூர் மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் முதல் நாளில் 177 பேர் வேட்பு மனுத்தாக்கல்
x
தினத்தந்தி 9 Dec 2019 11:15 PM GMT (Updated: 9 Dec 2019 7:00 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று முதல் நாளில் 177 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

திருவள்ளூர்,

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய 2 நாட்கள் 2 கட்டங்களாக நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் துவங்கியது.

இவற்றில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக எல்லாபுரம் ஒன்றியத்தில் 1 நபரும், கும்மிடிப்பூண்டியில் 3 பேரும், மீஞ்சூரில் 1 நபரும், பூண்டி ஒன்றியத்தில் 1 நபரும், சோழவரத்தில் 4 பேரும், திருவள்ளூரில் 3 பேர் என மொத்தம் 13 பேர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

அதேபோல வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட எல்லாபுரம் ஒன்றியத்தில் 25 பேரும், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 43 பேரும், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 20 பேரும், மீஞ்சூரில் ஒன்றியத்தில் 6 பேரும், பூந்தமல்லி ஒன்றியத்தில் 3 பேரும், பூண்டி ஒன்றியத்தில் 16 பேரும், புழல் ஒன்றியத்தில் 1 நபரும், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் 6 பேரும், சோழவரம் ஒன்றியத்தில் 29 பேரும், திருவாலங்காடு ஒன்றியத்தில் 8 பேரும், திருவள்ளூர் ஒன்றியத்தில் 4 பேரும், வில்லிவாக்கம் ஒன்றியத்தில் 3 பேர் என மொத்தம் 164 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று ஒரே நாளில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு 177 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாள் என்பதால் யாரும் பெருமளவில் வேட்புமனு தாக்கல் செய்ய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விண்ணப்பங்களை பெற்று செல்ல வேட்பாளர்கள் வந்தனே தவிர யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் திருவள்ளூர் மற்றும் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வேட்புமனுத்தாக்கல் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் இருந்து மாவட்ட கவுன்சிலர் பதவிக்கோ, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கோ நேற்று யாரும் வேட்டு மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தணி தாலுகாவில் திருத்தணி, திருவாலாங்காடு ஆகிய 2 ஒன்றியங்கள் உள்ளன. இங்கு நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளான வார்டு உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய இடங்களுக்கு நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. பள்ளிப்பட்டு ஒன்றியத்திலும் வேட்புமனுத்தாக்கல் செய்ய யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story