தஞ்சை பெரியகோவிலில் சாமி சிலைகளுக்கு மாவு-தயிர் பூசும் பணி தொடங்கியது


தஞ்சை பெரியகோவிலில் சாமி சிலைகளுக்கு மாவு-தயிர் பூசும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 10 Dec 2019 4:00 AM IST (Updated: 10 Dec 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பெரியகோவிலில் சாமி சிலைகளுக்கு மாவு-தயிர் பூசும் பணி தொடங்கியது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது. இக்கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இந்த கோவில் கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த ஆண்டு(2020) பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடக்கிறது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2-ந் தேதி பாலாலயம் நடத்தப்பட்டு மூலவர் உள்ளிட்ட சாமி சிலைகள் முன்பாக திரை போடப்பட்டுள்ளது. அனைத்து பூஜைகளும் உற்சவர் சாமிகளுக்கு மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. கோவிலில் கோபுரங்கள் சுத்தம் செய்யப்பட்டு, சிதிலமடைந்த சிற்பங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பூசும் பணி

இந்தநிலையில் கோவில் சன்னதி மற்றும் திருச்சுற்று மாளிகையில் உள்ள ஈசானமூர்த்தி, 252 சிவலிங்கங்கள், 12 விநாயகர் சிலைகள், 8 முருகன் சிலைகள் மற்றும் நவக்கிரக சாமிகள், சப்தக்கன்னிகள் அடங்கிய சிலா மூர்த்திகளுக்கு ஆகமவிதிப்படி மா காப்பு பூசும் பணி நேற்று தொடங்கியது.

450 லிட்டர் தயிர், 200 கிலோ பச்சரிசி மாவு, 250 கிலோ சீயாக்காய் ஆகியவை கொண்ட கலவை மா காப்பு என அழைக்கப்படும். அந்த மா காப்பானது சிலா மூர்த்திகளுக்கு பூசப்பட்டது. இப்படி பூசுவதால் சிலைகள் எந்தவித சேதமும் இன்றி தூய்மைப்படுத்தப்படும். இந்த பணியில் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர். இந்த பணி 15 நாட்கள் நடைபெறும். மா காப்பு பூசப்பட்ட சிலைகளில் 2 நாட்கள் கழித்து அந்த மா காப்பு அகற்றப்பட்டு, அதன்பிறகு எண்ணெய் காப்பு சாத்தப்படும்.


Next Story