மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 3,255 லிட்டர் எரிசாராயம் தீ வைத்து அழிப்பு


மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 3,255 லிட்டர் எரிசாராயம் தீ வைத்து அழிப்பு
x
தினத்தந்தி 10 Dec 2019 3:00 AM IST (Updated: 10 Dec 2019 1:26 AM IST)
t-max-icont-min-icon

மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 3,255 லிட்டர் எரிசாராயம் தீ வைத்து அழிக்கப்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் பகுதிகளில் இந்த ஆண்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 93 கேன்களில் இருந்த 3,255 லிட்டர் எரிசாராயத்தை விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சத்து 50 ஆயிரமாகும். பறிமுதல் செய்யப்பட்ட இந்த எரிசாராய கேன்கள், மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இவற்றை அழிப்பதற்கு அனுமதி கேட்டு விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து எரிசாராயத்தை அழிப்பதற்கு அனுமதியளித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் நேற்று மாலை போலீஸ் நிலையத்தில் இருந்து வேன் மூலம் எரிசாராய கேன்களை விழுப்புரம் அருகே பிடாகத்தில் உள்ள தென்பெண்ணையாற்றுக்கு போலீசார் எடுத்துச்சென்றனர்.

அங்குள்ள ஆற்றின் கரையோரத்தில் நீதிபதி அருண்குமார், இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் எரிசாராயம் கீழே ஊற்றி தீ வைத்து அழிக்கப்பட்டது.

Next Story