முதுமலை முகாமில், பாகனுடன் படுத்து தூங்கும் குட்டியானை


முதுமலை முகாமில், பாகனுடன் படுத்து தூங்கும் குட்டியானை
x
தினத்தந்தி 9 Dec 2019 10:30 PM GMT (Updated: 9 Dec 2019 8:14 PM GMT)

முதுமலை யானைகள் முகாமில் குட்டி யானை ஒன்று பாகனுடன் படுத்து தூங்குகிறது.

மசினகுடி,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் 24 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் மட்டுமின்றி தமிழகத்தின் மற்ற வனப்பகுதிகளிலும் தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகளை இந்த முகாமிற்கு கொண்டு வந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஏராளமான குட்டி யானைகள் இங்கு பராமரிக்கப்பட்டு தற்போது கும்கி யானைகளாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தாயை பிரிந்து தவித்த பிறந்து சில நாட்களே ஆன குட்டி யானை ஒன்று முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உடல் நலம் குன்றி சோர்வுடன் காணபட்ட அந்த குட்டி யானைக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சை காரணமாக உடல் அரோக்கியத்துடன் இருக்கும் இந்த குட்டி யானை தற்போது முகாமில் உள்ள கிரால் என்றழைக்கப்படும் மரக்கூண்டில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த குட்டியானையை பராமரிக்க பொம்மன் என்ற பாகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுட்டி தனமாக சுற்றி திரியும் அந்த குட்டி யானையை அம்மு என்று செல்லமாக அழைக்கின்றனர். ஆனால் அதிகாரபூர்வமாக பெயர் இன்னும் சூட்டப்படவில்லை. அதன் பாகன் பொம்மன் குட்டியானையை ஒரு குழந்தையை போல பராமரித்து வருகிறார். தினந்தோறும் காலையில் குளிக்க வைக்கப்படும் அந்த குட்டி யானை சில மணி நேரம் வெயிலில் விடப்படுகிறது. பின்னர் கூண்டிற்குள் அடைக்கபடுகிறது.

தற்போது குளிர் காலம் தொடங்கி உள்ளதால் காலை நேரங்களில் சுடு தண்ணீரில் குட்டி யானை குளிக்க வைக்கப்படுகிறது. இரவு நேரத்தில் குளிரின் தாக்கம் இருப்பதால் அந்த குட்டி யானை வைக்கப்பட்டுள்ள மரக்கூண்டில் படுத்து தூங்க படுக்கை வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

இந்த யானைக்கு பசி எடுத்தால் தொடர்ந்து சத்தமிட்டு பாகனை வரவழைக்கும். பின்னர் உணவு சாப்பிட்டவுடன், பாகனுடன் நன்றாக தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்த குட்டி யானை பிறந்து சில மாதங்களே ஆனதால் சுற்றுலா பயணிகள் பார்க்க அனுமதிப்பதில்லை. இருப்பினும் அந்த குட்டி யானை வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பாகன்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 

Next Story