மின்சார வாரிய கேங்மேன் பணியிடங்களுக்கு உடல் தகுதி தேர்வு தொடங்கியது


மின்சார வாரிய கேங்மேன் பணியிடங்களுக்கு உடல் தகுதி தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 9 Dec 2019 11:00 PM GMT (Updated: 9 Dec 2019 8:30 PM GMT)

திருச்சியில் மின்சார வாரிய கேங்மேன் பணியிடங்களுக்கு உடல் தகுதி தேர்வு தொடங்கியது.

திருச்சி,

தமிழக மின்சார வாரியத்தில் கேங்மேன் பணியிடங்களுக்கு உடல் தகுதி தேர்வு நடந்து வருகிறது. அந்த வகையில் திருச்சியில் உடல் தகுதி தேர்வு பிராட்டியூர் துணை மின் நிலைய வளாகத்தில் நேற்று தொடங்கியது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. நேற்று நடந்த தேர்வில் 200 பேரில் 125 பேர் பங்கேற்றனர்.

திருச்சி பெருநகர செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் தேர்வு நடந்தது. தேர்வர்களின் சான்றிதழ்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். அதன்பின் மின்கம்பத்தில் ஏறி கம்பிகளை கட்டும் தேர்வு நடந்தது. இதற்காக அந்த இடத்தில் மாதிரி மின்கம்பங்கள் நடப்பட்டிருந்தன. அதன்மீது அவர்கள் ஏறி கம்பிகளை கட்டினர். இதற்கான உபகரணங்களையும் அவர்கள் எடுத்து சென்றனர். மேலும் கயிறுகளும் உடலில் கட்டப்பட்டிருந்தன.

இளம்பெண்கள்

மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்தால் காயம் ஏற்படாமல் இருக்கும் வகையில் அதன் கீழே வலை அமைக்கப்பட்டிருந்தது. மேலும் தரைப்பகுதியில் தேங்காய் நாறுகள் போடப்பட்டிருந்தன. இத்தேர்வில் 3 இளம்பெண்கள் கலந்து கொண்டனர். மின்கம்பத்தில் அவர்கள் ஆண்களுக்கு இணையாக ஏறினர். ஆனால் அவர்களால் முழுமையாக ஏறமுடியவில்லை. அவர்களது முயற்சியை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

உடல் தகுதி தேர்வு வருகிற 18-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சியானவர்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறும்.

தேர்வு குறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘கீழ் நிலை ஊழியர் பணியிடங்களுக்கான இந்த தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி 5-ம் வகுப்பு ஆகும். ஆனால் இத்தேர்வில் பட்டப்படிப்பு படித்த பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளனர். மின்கம்பத்தில் ஏறி பணிகளை மேற்கொள்ள வேண்டியதே முதல் பணியாகும். அதனால் மாதிரி மின்கம்பத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிகளை செய்து முடித்தால் மட்டுமே தேர்ச்சி பெறுவார்கள்.

ஆண், பெண் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்ததால் பெண்கள் சிலரும் தேர்வில் பங்கேற்றனர். திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,800 பேருக்கு உடல்தகுதி தேர்வு நடைபெற உள்ளது’ என்றனர்.

Next Story