திருப்பூரில் செய்வினையை நீக்குவதாக கூறி தொழிலாளியிடம் பணம் பறிக்க முயற்சி - 2 என்ஜினீயர்கள் கைது


திருப்பூரில் செய்வினையை நீக்குவதாக கூறி தொழிலாளியிடம் பணம் பறிக்க முயற்சி - 2 என்ஜினீயர்கள் கைது
x
தினத்தந்தி 10 Dec 2019 4:30 AM IST (Updated: 10 Dec 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் செய்வினையை நீக்குவதாக கூறி தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்ற 2 என்ஜினீயர்களை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நல்லூர், 

திருப்பூர், கோவில்வழியில் ஒரு பனியன் நிறுவனம் எதிரில் வசித்து வருபவர் மகேஸ்வரன் (வயது 35). பனியன் நிறுவன தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இவரது வீட்டிற்கு 2 வாலிபர்கள் வந்திருந்தனர். அவர்கள் தங்களுக்கு மாந்திரீகம், ஜோதிடம் தெரியும் என்றும், உங்கள் குழந்தைக்கு யாரோ செய்வினை வைத்து உள்ளனர். அதனை நீக்க வேண்டும் என்றால் ரூ.4500 செலவாகும். செலவு செய்தால் வழிபாடுமூலம் செய்வினையை நீக்கி விடலாம் எனகூறியுள்ளனர்.

அவர்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த மகேஸ்வரன் ஊரக போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தஞ்சைமாவட்டம், கும்பகோணம், மருத நல்லூர் பகுதியை சேர்ந்தவெங்கடேசன் மகன் பாலாஜி (24) என்பதும், திருவாரூர் தாலுகா மருதப்பட்டினத்தை சேர்ந்த சங்கர் மகன் மகாபிரபு (23) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் திருப்பூர், திருமுருகன்பூண்டி பகுதியில் தங்கி இருந்து இது போன்று பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீட்டில் உள்ளவர்களிடம்செய்வினையை நீக்குவதாக கூறி பலரிடம் பணம் பறித்து உள்ளதும் தெரியவந்தது. பிடிபட்ட 2 பேரும் என்ஜினீயரிங் படித்து முடித்து உள்ளனர் என்றும், செய்வினையை நீக்குவதாக கூறி பனியன் நிறுவன தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கைதான 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

Next Story