மின்சார கேபிள் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கிய ராமேசுவரம் - பொதுமக்கள் கடும் அவதி
மின்சார கேபிள் துண்டிக்கப்பட்டதால் ராமேசுவரம் பகுதி இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் மின்சாரம் மண்டபம் துணைமின் நிலையத்தில் இருந்து கேபிள் மூலம் கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் மண்டபம் முகாம் பஸ் நிறுத்தம் அருகே தேங்கிநின்ற மழை நீரை வெளியேற்றுவதற்காக மண்டபம் பேரூராட்சி மூலம் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நேற்று நடைபெற்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார கேபிள் துண்டிக்கப்பட்டது. துண்டிக்கப்பட்ட மின்சார கேபிள் ராமேசுவரம் மற்றும் தங்கச்சிமடம் பகுதிக்கு மின்சாரம் வரும் கேபிள் என்பதும் தெரியவந்தது. இதனால் நேற்று காலை 9.30 மணி அளவில் ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதியில் ஏற்பட்ட மின்வெட்டு ஆனது நேற்று இரவு வரை நீடித்து ராமேசுவரம் பகுதி இருளில் மூழ்கியது. மேலும் மண்டபம் முகாம் பகுதியில் சேதமடைந்த மின்சார கேபிள் வரும் பகுதியில் தொடர்ந்து மழை நீர் வந்து கொண்டிருப்பதால் மின்சார கேபிள் சீரமைக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இன்று(செவ்வாய்க் கிழமை) மாலைக்கு பிறகு தான் ராமேசுவரம் பகுதியில் வழக்கம்போல் மின் வினியோகம் சீராகும் என்று கூறப்படுகிறது. ராமேசுவரம் பகுதிக்கு வரக்கூடிய மின்சார கேபிள் அடிக்கடி இதுபோன்று சேதம் அடைந்து வருவதால் இந்த பகுதியில் நாள் முழுவதும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதாலும் பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள், குழந்தைகள், சுற்றுலா பயணிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள் மண்டபம் துணைமின் நிலையத்தில் இருந்து மண்டபம் கடற்கரை பூங்கா வரை வரும் மின்சார கேபிள் பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் அனைவருக்கும் தெரியும் வகையில் அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை பலகைகளை வைத்து மின்சார கேபிள் சேதமடையாமல் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story