பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் - பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதி


பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் - பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதி
x
தினத்தந்தி 11 Dec 2019 3:30 AM IST (Updated: 11 Dec 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

தானியங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் முறையான பராமரிப்பு இல்லாததால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் நிறைந்த பிரதேசமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளு குளு காலநிலையை அனுபவிக்க வருகை தருகின்றனர். பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகள், அடர்ந்த வனம் கொண்டதாக விளங்குவதால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்விடமாகவும் உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர், கோத்தகிரி வழியாக மலைப்பாதைகள் ஊட்டிக்கு செல்கிறது. இதேபோல் கேரளா-கர்நாடகா மாநிலங்கள் இணையும் எல்லையில் கூடலூர் நகரம் உள்ளது. இதன் வழியாக தேசிய நெடுஞ்சாலை ஊட்டிக்கு வருகிறது.

இச்சாலைகள் வழியாக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை அதிகளவு வனத்தில் வீசி செல்கின்றனர். இதனால் மண்ணின் வளம் கெடுகிறது. மேலும் வனவிலங்குகள் மற்றும் அரிய வகை உயிரினங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் தன்னார்வலர்களுடன் இணைந்து அதிகாரிகள் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை கண்காணித்து வருகின்றனர்.

மேலும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டது. இதன் காரணமாக திருமண மண்டபங்களில் பிளாஸ்டிக் இலைகள், டம்ளர்கள், தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதேபோல் கோவில்கள் உள்பட பல்வேறு விசே‌‌ஷ நிகழ்ச்சிகளிலும் பிளாஸ்டிக் இலைகள் பயன்படுத்துவது குறைந்தது.

ஆனால் சுற்றுலா பயணிகள் மூலமாக பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் நீலகிரிக்குள் அதிகளவு வந்தது. இதனால் சில வகை பொருட்களை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. தொடர்ந்து வணிக நிறுவனங்கள், உணவகங்கள், கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் விற்க தடை செய்யப்பட்டது. அதற்கு மாற்றாக மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகளின் கரையோரம் சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் பொருத்தப்பட்டது.

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் குடிநீர் ஏ.டி.எம். எந்திரத்தில் குடிநீர் பெற்றனர். இதனால் நீலகிரியில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை முறையாக பராமரிக்காததால் தற்போது குடிநீர் ஏ.டி.எம். எந்திரத்தில் தண்ணீர் வரத்து இல்லை. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

மேலும் எந்திரங்களில் வழங்கப்படும் குடிநீர் மாசு அடைந்து இருப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் பல லட்சம் செலவில் பொருத்தப்பட்ட எந்திரங்கள் வீணாகும் நிலை காணப்படுகிறது.

இது குறித்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கூறியதாவது:-

பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் தனியார் கடைகளிலும் எந்திரங்கள் மூலம் குடிநீர் வினியோகிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதேபோல் அரசின் செலவில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் முக்கிய சாலைகளின் கரையோரம் வைக்கப்பட்டுள்ளது. தொடக்க காலத்தில் நன்கு செயல்பட்ட எந்திரங்கள் பராமரிப்பு இல்லாததால் தற்போது குடிநீர் வருவது இல்லை. குறிப்பாக கேரள எல்லையான பாட்டவயல் தொடங்கி கூடலூர், நடுவட்டம், பைக்காரா, தலைக்குந்தா வரை குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் செயல்படுவது இல்லை.

இதனால் அதிக விலை கொடுத்து கடைகளில் விற்கப்படும் குடிநீரை வாங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இனி வரும் காலங்களில் சீசன் தொடங்க உள்ளது. இதனால் அதிகளவு சுற்றுலா பயணிகள் வர உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டுள்ள தானியங்கி குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story