அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா: 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது


அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா: 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது
x
தினத்தந்தி 11 Dec 2019 4:30 AM IST (Updated: 11 Dec 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோ‌‌ஷத்துடன் தீப தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை,

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான திருமாலுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டு சிவனிடம் சென்று கேட்டனர். அப்போது அக்னிபிழம்பாய் தோன்றிய சிவன் தனது அடியையும், முடியையும் கண்டறிந்து வருபவரே பெரியவர் என தெரிவித்தார். அடியை காண திருமால் வராக (பன்றி) உருவமெடுத்து நிலத்தினை குடைந்து சென்றார். ஆனால் அடியை காண முடியாமல் திரும்பினார். பிரம்மா அன்ன வடிவெடுத்து வானில் பறந்து சென்றார். பின்னர் அவர் முடியை கண்டு விட்டதாக பொய் கூறினார்.

பிரம்மா பொய் கூறியதால் சிவபெருமான் பிரம்மாவுக்கு உலகில் எங்கும் கோவில் கட்டி வழிபட கூடாது என்று சாபம் விட்டார்.

பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் இடையே தான் என்ற அகந்தையை போக்க திருவண்ணாமலையில் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக சிவன் காட்சி அளித்த அந்த நாளை கார்த்திகை தீபத் திருவிழாவாக கொண்டாடி வருகிறோம். அக்னி பிழம்பாக காட்சி அளித்ததால் மலையை பக்தர்கள் சிவனாக வழிபட்டு வருகின்றனர்.

பவுர்ணமி மற்றும் தீப திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரரை தரிசித்து செல்கின்றனர். மலையில் அக்னிபிழம்பாக சிவபெருமான் காட்சி அளித்ததால் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மகாதீபம் ஏற்றப்படும் நாளே திருக்கார்த்திகை நாளாக பொதுமக்கள் வீடுகளில் அகல் விளக்கேற்றி சிவனை வழிபட்டு வருகின்றனர்.

தீபத் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் தினமும் வெவ்வேறு வாகனங்களில் உலா வந்தனர்.

முக்கிய நிகழ்ச்சிகளான வெள்ளி தேரோட்டம் 6-ந் தேதியும், பஞ்ச மூர்த்திகளின் பஞ்சரத தேரோட்டம் 7-ந் தேதியும் நடந்தது. இதில் விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களை ஒவ்வொன்றாக மாடவீதிகளில் பக்தர்கள் வீதி உலாவாக இழுத்து சென்று வழிபட்டனர்.

நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டதும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கோவிலுக்குள் கூட்டம், கூட்டமாக வந்து பரணி தீபத்தை தரிசிக்க காத்து இருந்தனர். பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனையுடன் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சாமி சன்னதி முன்புள்ள அர்த்த மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றினர். பின்னர் அதிலிருந்து பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் வெளியே கொண்டு வந்தனர். பரணி தீபத்தை பார்த்ததும் கோவிலில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று கோ‌‌ஷமிட்டு சாமியை வழிபட்டனர். பக்தர்களின் கூட்டத்திற்கு நடுவே பரணி தீபம் பிரகாரத்தை சுற்றி கொண்டு வரப்பட்டு வைகுந்த வாயில் வழியாக மகா தீபம் ஏற்றப்படும் மலைக்கு காட்சி கொடுக்கப்பட்டது.

அங்கிருந்து உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது. அம்மன் சன்னதி, சாமி சன்னதிகளுக்கு வெளியே தரிசனத்திற்காக பரணிதீபம் கொண்டு வரப்பட்டு காலபைரவர் சன்னதியில் வைக்கப்பட்டது. அதன்பின்னர் கோவிலில் இருந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர். சிவாச்சாரியார்கள் மகா தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

தீப விழாவை காண ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கானவர்கள் திருவண்ணாமலைக்கு நேற்று அதிகாலை முதல் வருகை தந்தனர். பின்னர் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினார்கள்.

கிரிவலம் செல்லும் பாதையில் உள்ள 8 லிங்கங்கள், தட்சிணாமூர்த்தி, திருநேர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு சாமிகளை பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றனர். நேரம் செல்ல, செல்ல கிரிவல பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மகா தீபத்தை தரிசிக்க பிற்பகல் 2 மணிக்கு மேல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாலை 5 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக சன்னதியில் இருந்து ஆடியபடி வந்து தீப மண்டபத்தில் உள்ள தங்க விமானத்தில் நிலை நிறுத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மாலை 6 மணிக்கு சாமி சன்னதியில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் ஆடியபடியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து சென்றவுடன் சாமி சன்னதி முன்பாக உள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்பட்டது.

அதே நேரத்தில் 2,668 அடி உயர மலை உச்சியில் சிவாச்சாரியார்கள் சங்குகள் முழங்க பர்வதராஜ குலத்தினர் மகாதீபம் ஏற்றினார்கள். மலை ஏறிய பக்தர்கள் கொப்பரை வைக்கப்பட்ட இடத்தில் இருந்து 10 அடி தூரத்தில் நிறுத்தப்பட்டனர். பக்தர்கள் அங்கிருந்து மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.

கிரிவல பாதையில் சென்று கொண்டிருந்த பக்தர்கள், கோவிலில் இருந்த பக்தர்கள், திருவண்ணாமலை நகரில் உள்ள வீடுகள், வணிக வளாகங்களில் மேல்மாடியில் நின்று கொண்டிருந்த பக்தர்கள், திருவண்ணாமலையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தீபம் ஏற்றியவுடன் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி கோ‌‌ஷ முழக்கத்துடன் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். மகா தீபம் ஏற்றப்பட்டதும் நகரம் முழுவதும் பட்டாசு வெடித்து வாணவேடிக்கை நடந்தது.

அதன்பின்னர் பொதுமக்கள் வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர். இதையடுத்து வீடு, கடை, வணிக வளாகங்களில் மின்விளக்குகளை எரிய செய்தனர். மகா தீபத்தை முன்னிட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தீப விழாவை தொடர்ந்து இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரி‌‌ஷப வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனர்.

இன்று (புதன்கிழமை) சந்திரசேகரர் தெப்பல் உற்சவம், நாளை (வியாழக்கிழமை) காலை உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி, பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம், 14-ந் தேதி (சனிக்கிழமை) வெள்ளி ரி‌‌ஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் வீதியுலாவும் நடக்கிறது.

Next Story