அதியமான்கோட்டை அருகே வீட்டில் நாட்டுத்துப்பாக்கி தயாரித்த முதியவர் கைது


அதியமான்கோட்டை அருகே வீட்டில் நாட்டுத்துப்பாக்கி தயாரித்த முதியவர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2019 3:45 AM IST (Updated: 11 Dec 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

அதியமான்கோட்டை அருகே வீட்டில் நாட்டுத்துப்பாக்கி தயாரித்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள ராஜாதோப்பு பகுதியில் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்வதாக தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜனுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அதியமான்கோட்டை போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீசார் ராஜாதோப்பு பகுதிக்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (வயது75) என்பவர் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

பறிமுதல்

அப்போது கோவிந்தசாமி வன விலங்குகளை வேட்டையாடும் நாட்டுத்துப்பாக்கிகளை தயாரித்து விற்பனை செய்து வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவருடைய வீட்டில் இருந்த 2 நாட்டுத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்திய மரக்கட்டைகள், உபகரணங்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story