கடைகள், குடோன்களில் வெங்காயம் பதுக்கலா? உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ‘திடீர்’ சோதனை


கடைகள், குடோன்களில் வெங்காயம் பதுக்கலா? உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ‘திடீர்’ சோதனை
x
தினத்தந்தி 11 Dec 2019 3:45 AM IST (Updated: 11 Dec 2019 5:53 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் உள்ள கடைகள், குடோன்களில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் திடீரென சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்,

வேலூர் நேதாஜி மற்றும் லாங்கு பஜார் மார்க்கெட்டிற்கு மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள், வெங்காயம் கொண்டு வரப்படுகின்றன. மராட்டியம், கர்நாடகா மாநிலங்களில் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக அங்கு வெங்காய பயிர்கள் அழிவை சந்தித்தன. அதனால் வேலூர் மார்க்கெட்டிற்கு வெங்காய வரத்து குறைந்தது.

அதன் எதிரொலியாக விலையும் ‘கிடு கிடு’வென உயர்ந்து அதிகபட்சமாக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெங்காய விலை உயர்வால் அனைத்து தரப்பினரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக நடுத்தர குடும்பத்தினரின் பட்ஜெட், வெங்காய விலையால் அதிகமானது. ஓட்டல்களில் வெங்காயம் சேர்க்காமல் உணவுகளை தயாரித்து விற்பனை செய்தனர். விலையை குறைக்கவும், தட்டுப்பாட்டை போக்கவும் மத்திய அரசு எகிப்து நாட்டில் இருந்து வெங்காயத்தை கப்பல் மூலம் இறக்குமதி செய்தது.

இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள மொத்த விற்பனை கடைகள், குடோன்களில் வெங்காயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா? என்று சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில் வேலூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம் மற்றும் போலீசார் நேற்று காலை வேலூர் லாங்குபஜார், நேதாஜி மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகள், குடோன்களில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் வெங்காய வரத்து, இருப்பு நிலவரம் மற்றும் விலை நிர்ணயம் குறித்து கடை உரிமையாளர்களிடம் கேட்டறிந்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “வேலூர் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் 50 கிலோ வெங்காய மூட்டை ரூ.7,500-க்கு விற்பனையானது. நேற்று அதே வெங்காய மூட்டை ரூ.6,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லரை விற்பனையில் கிலோ ரூ.100 முதல் ரூ.160 வரை வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயம் பதுக்கி வைத்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Next Story