ரூ.2 கோடியில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அடுத்த வாரத்துக்குள் பணிகளை முடிக்க தீவிரம்


ரூ.2 கோடியில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அடுத்த வாரத்துக்குள் பணிகளை முடிக்க தீவிரம்
x
தினத்தந்தி 12 Dec 2019 4:15 AM IST (Updated: 12 Dec 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் மின் இணைப்பு, குடிநீர், கழிவறை வசதிகளுடன் ரூ.2 கோடியில் காய்கறி மார்க்கெட் தயாராகி வருகிறது. அடுத்த வாரத்துக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தஞ்சாவூர்,

தஞ்சை அரண்மனை அருகே உள்ளது காமராஜர் மார்க்கெட். இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் போன்ற இடங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து தஞ்சை நகரில் பல்வேறு பகுதிகள் மற்றும் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மன்னார்குடி போன்ற பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள்.

இந்த மார்க்கெட்டில் பெரிய கடைகள் 93-ம், சில்லரை விற்பனை கடைகள் 212-ம், தரைக்கடைகளும் உள்ளன. தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு ரூ.904 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காமராஜர் மார்க்கெட் ரூ.17 கோடியில் புதிதாக 17 ஆயிரத்து 225 சதுரஅடி பரப்பளவில் கட்டப்படுகிறது. இங்கு 211 கடைகள் கட்டப்படுகின்றன. முதல் தளத்தில் அலுவலக கட்டிடம் 3-ம், கழிவறை வசதிகளும் அமைக்கப்படுகின்றன. மேலும் இந்த மார்க்கெட்டில் 8 லாரிகள், 17 நான்கு சக்கர வாகனங்கள், 176 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுகின்றன. இது தவிர குடிநீர் வசதி, ஏ.டி.எம். வசதி, கண்காணிப்பு காமிரா, தீயணைப்பு வசதியும் இங்கு அமைக்கப்படுகிறது.

வேறு இடத்துக்கு மாற்றம்

இதன் ஒரு பகுதியாக தஞ்சை பழைய பஸ் நிலையம், திருவையாறு பஸ்கள் நிற்கும் இடம் ஆகியவை மூடப்பட்டு தற்காலிக பஸ் நிலையம் கரந்தை பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதே போல் சிவகங்கை பூங்கா, ராஜப்பா பூங்காவும் மூடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து சரபோஜி மார்க்கெட் பகுதியிலும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக கடந்த மாதம் 7-ந்தேதியுடன் காமராஜர் மார்க்கெட் மூடப்பட்டு பணிகள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் மார்க்கெட்டில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

இதையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி தற்காலிக மார்க்கெட் தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் உள்ள காவேரி நகரில் அமைந்துள்ள எஸ்.பி.சி.ஏ. மைதானத்தில் அமைக்கும்பணி மாநகராட்சி சார்பில் தொடங்கி நடைபெற்றது. மேலும் வடகிழக்குப்பருவமழை தொடர்ந்து பெய்ததால் பணிகள் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

மின் இணைப்பு பணி

அதன்படி தற்போது தற்காலிக மார்க்கெட் கான்கிரீட்டால் ஆன தரைதளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தகரத்தினால் ஆன கொட்டகைகளும் போடப்பட்டுள்ளன. இதில் 3 பகுதிகளை சுற்றிலும் தகரத்தினால் அடைக்கப்பட்டு ஒரு பகுதி மட்டும் திறந்த நிலையில் 93 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் 220 கடைகள் மேல் பகுதியில் மட்டும் கூரைகள் போடப்பட்டு சுற்றிலும் திறந்த நிலையிலும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து கடைகளுக்கும் மின் இணைப்பு வழங்குவதற்காக மார்கெட்டிற்கு நுழையும் இடத்தில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அடுத்த வாரத்துக்குள் முடியும்

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘காமராஜர் மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு தற்காலிக மார்க்கெட் பகுதியில் கடைகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக மாத வாடகை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் தற்காலிக மார்க்கெட் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது கடைகள் அமைக்கப்பட்டு மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மார்க்கெட் பகுதியில் உள்ள சாலைகள் மட்டும் போடப்பட வேண்டி உள்ளது. மழை பெய்ததால் சாலை பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது மழை நின்று விட்டதால் சாலை போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த வார இறுதிக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும்’’என்றனர்.

Next Story