பாசனத்துக்கு வழங்கப்படும் தண்ணீரை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் தலைமைப்பொறியாளர் வேண்டுகோள்


பாசனத்துக்கு வழங்கப்படும் தண்ணீரை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் தலைமைப்பொறியாளர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 11 Dec 2019 10:45 PM GMT (Updated: 11 Dec 2019 7:44 PM GMT)

பாசனத்துக்கு வழங்கப்படும் தண்ணீரை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்று பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர்,

பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை தலைமைப்பொறியாளர் ராமமூர்த்தி தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணைக்கால்வாய் தலைப்பு பகுதியில் இருந்து ஆய்வு மேற்கொண்டார். கல்லணைக்கால்வாய் தலைப்பு பகுதியில் உள்ள ரெகுலேட்டர் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் மகாராஜ சமுத்திரம், அக்னியாறு, புதுப்பட்டினம் பகுதியில் உள்ள பாசன வாய்க்கால் ரெகுலேட்டர், மேற்பனைக்காடு பாசன வாய்க்காலில் உள்ள ரெகுலேட்டர், நீர்த்தேக்கம் பராமரிப்பு மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் அளவீடுகளை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து நெய்வாசல் தென்பாதி, வடசேரி வாய்க்கால், கல்யாணஓடை வாய்க்கால், ராஜாமடம் வாய்க்கால், புதுப்பட்டினம் வாய்க்கால் ஆகிய பாசன பகுதிகளையும் ஆய்வு செய்தார்.

குடிமராமத்து பணி

பின்னர் தலைமைப்பொறியாளர் ராமமூர்த்தி, மேற்பனைக்காடு ஏரியில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்தார். மேலும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அலுவலக கட்டிடங்களையும் முறையாக பராமரிக்கவும், பாசனத்துக்கு வழங்கப்படும் தண்ணீரை உரிய முறையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து அவர் கல்லணைக்கால்வாய் புனரமைப்பு பணிக்கு தயாரிக்கப்பட்டு இருந்த மதிப்பீட்டினையும் ஆய்வு செய்தார்.

அப்போது கீழ்காவிரி வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், கல்லணைக்கால்வாய் செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர்கள் சண்முகவேல், அன்பரசன், உதவி பொறியாளர்கள் அன்புச்செல்வன், சேந்தன், மதியழகன், ராஜமாணிக்கம், பிரசன்னா ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story