சிவமொக்கா டவுனில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.2 கோடி மோசடி தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு
சிவமொக்கா டவுனில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்துவிட்டு தலைமறைவானவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
சிவமொக்கா,
சிவமொக்கா டவுன் பழைய பாலம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் நாயக். இவர் அப்பகுதியில் துங்கா சிட்பண்ட் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிதி நிறுவனத்தில் மாதந்தோறும் ரூ.2 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் மாதச்சீட்டு கட்டி வந்தனர். சீட்டு பணத்தின் மூலம் சங்கர் நாயக்குக்கு ரூ.2 கோடி வரை கிடைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நிதி நிறுவனம் திறக்கப்படவில்லை.
ஆரம்பத்தில் சங்கர் நாயக் வெளியூருக்கு சென்று இருப்பார் என்று சீட்டு கட்டியவர்கள் நினைத்து இருந்தனர். ஆனால் அவர் நீண்ட நாட்கள் ஆனபோதிலும் திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிலர் சங்கர் நாயக்கிற்கு செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
ரூ.2 கோடி மோசடி
அப்போது தான் நிதி நிறுவனம் நடத்தி ரூ.2 கோடியை மோசடி செய்து விட்டு சங்கர் நாயக் தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்து சங்கர் நாயக்கிடம் பணம் கட்டிய வினோபாநகர் பகுதியை சேர்ந்த சித்தலிங்கப்பா உள்பட 42 பேர் சங்கர் நாயக்கின் மீது கோட்டை போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் சங்கர் நாயக் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story