திராவிட கட்சிகளுக்கு ரஜினிகாந்த் ஆதரவு உண்டா? - சகோதரர் சத்தியநாராயணராவ் பேட்டி


திராவிட கட்சிகளுக்கு ரஜினிகாந்த் ஆதரவு உண்டா? - சகோதரர் சத்தியநாராயணராவ் பேட்டி
x
தினத்தந்தி 12 Dec 2019 4:30 AM IST (Updated: 12 Dec 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

திராவிட கட்சிகளுக்கு ரஜினிகாந்த் ஆதரவு உண்டா? என்று திருப்பூரில் சகோதரர் சத்தியநாராயணராவ் பேட்டி அளித்து உள்ளார்.

அனுப்பர்பாளையம்,

நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்த நாள் விழா திருப்பூர் மாநகர ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இன்று (வியாழக்கிழமை) திருப்பூரில் கொண்டாடப்படுகிறது. இதற்காக ரஜினிகாந்தின் சகோதரர் சத்திய நாராயணராவ் நேற்று திருப்பூருக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரஜினிகாந்த் முழுமையாக அரசியலுக்கு வருவார். அப்போது கட்சியின் கொள்கை உள்பட அனைத்து முடிவுகளையும் தெளிவாக அறிவிப்பார். அதற்காக நாங்கள் தயாராக உள்ளோம்.

ஆன்மிகம் என்பது தர்மம், நியாயம். அதனால் ரஜினியின் அரசியல் அது சார்ந்து தான் இருக்கும். வரும் உள்ளாட்சி தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் யாருக்கும் ஆதரவு அளிக்காது என்று ஏற்கனவே தெரிவித்து விட்டார். ரஜினிகாந்தின் கருத்துகளுக்கு அமைச்சர்கள் செய்யும் விமர்சனங்களை அவர் மனதில் வைத்துக் கொள்வதில்லை. ரஜினி மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார்.

ரஜினி, கமல் இணைந்து செயல்படுவது குறித்து அனைவரிடமும் கலந்து பேசிய பிறகு தான் முடிவு எடுப்பார்கள். அரசியலில் உள்ள அனைவரும் கெட்டவர்கள் இல்லை. நல்லவர்களும் இருக்கிறார்கள். நல்லவர்கள் வந்தால் எங்களோடு சேர்த்து கொள்வோம். ரஜினிகாந்தின் கருத்துகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருப்பதாக கூறுவது தவறு. காங்கிரஸ், பா.ஜ.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் ரஜினிக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் அக்கட்சிகளில் முக்கிய தலைவர்கள் சந்திக்கிறார்கள். திராவிட கட்சிகளுக்கு ரஜினியின் ஆதரவு இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் மேகநாதன், மாநகர செயலாளர் ரவிக்குமார், இணை செயலாளர்கள் கே.ஜி.எஸ்.ரமேஷ், சதீஷ் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி இன்று காலை 5 மணிக்கு திருப்பூர் கொங்கணகிரி முருகன் கோவிலில் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் தலைமையில் 12 ஏழை ஜோடிகளுக்கு இலவச சீர்வரிசையுடன் திருமணம் நடைபெறுகிறது. மேலும் பார்க் ரோட்டில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் சிறப்பு பூஜையும், மாலை சாய்பாபா கோவிலில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் நடைபெறுகிறது. இதேபோல் ரத்ததான முகாம், நலத்திட்ட உதவிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

முன்னதாக கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற 2020-ம் ஆண்டில் ரஜினி கட்சியை தொடங்கி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பார்.

வருகிற 2021-ம் ஆண்டு ரஜினிகாந்த் கூறிய அதிசயம், அற்புதம் நிகழும். 2021-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி முதல்-அமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவார். நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து ரஜினி கருத்து கூறுவார். தமிழகத்தில் ரஜினி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது நிச்சயம், நாச்சிக்குப்பம் கிராமத்திற்கும் வருவார்.

இவ்வாறு அவர்கூறினார்.

Next Story