கோவை அருகே நள்ளிரவில், மோட்டார் சைக்கிள் சாகச பந்தயம்; 21 வாலிபர்கள் மீது வழக்கு - வாகனங்களையும் பறிமுதல் செய்து போலீசார் அதிரடி
வடவள்ளி -மருதமலை சாலையில், மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 21 வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வாகனங்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வடவள்ளி,
கோவை வடவள்ளி- மருதமலை சாலையில் கடந்த சில நாட்களாக வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்தபடி பந்தயத்தில் ஈடுபடுகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் வடவள்ளி-மருதமலை சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சுமார் 12 மணியளவில் ஐ.ஓ.பி. காலனியில் 11 மோட்டார் சைக்கிள்களில் 23 வாலிபர்கள் அதிவேகமாக சாகசம் செய்தபடி வந்தனர். உடனே போலீசார் அவர்களை நிற்குமாறு சைகை செய்தனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் மிகவும் வேகமாக சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து 2 குதிரை வண்டிகளும் அதிவேகமாக சென்றன.
உடனே போலீசார் மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்களை ஜீப்பில் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்தபடி அந்த சாலையில் எப்போதும் பந்தயத்தில் ஈடுபடுவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 11 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 குதிரை வண்டிகளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பிடிபட்ட வாலிபர்கள் 21 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story