உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியை கவனிக்க போலீஸ் தனிப்பிரிவு


உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியை கவனிக்க போலீஸ் தனிப்பிரிவு
x
தினத்தந்தி 12 Dec 2019 3:15 AM IST (Updated: 12 Dec 2019 2:35 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியை கவனிக்க போலீஸ் தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் தலா 7 ஊராட்சி ஒன்றியங்கள் வீதம் 2 கட்டமாக வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. இதில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக போலீஸ் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னிவளவன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா உள்பட 15 போலீசார் இந்த தனிப்பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த தனிப்பிரிவை சேர்ந்த போலீசார், கடந்த முறை நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது எந்தெந்த வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக இருந்தன. எந்த வாக்குச்சாவடி மையத்தில் பிரச்சினை ஏற்பட்டது. பதற்றமான வாக்குச்சாவடிகள் எத்தனை இருக்கின்றன உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலின் போது தேவையான இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த பரிந்துரை செய்வார்கள்.

அத்துடன் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்கள் குறித்த வரைபடங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் எந்த இடங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும். எந்த வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்பதை போலீசார் எளிதில் அறிந்துகொள்ள முடியும். மேலும் அந்த மையங்களில் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட முடியும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story