கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார்
திருப்போரூர் அருகே கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.
சென்னை,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நம்மாழ்வார் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் தங்கதுரை. இவரது மகன் கிஷோர் (வயது 18) இவர் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த காலவாக்கம் எஸ்.எஸ்.என். என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். நேற்றுமுன்தினம் இரவு, 9 மணிக்குமேல் கிஷோரை அவரது சகோதரர் தொடர்பு கொண்டார். நீண்ட நேரம் தொடர்பு கொண்ட பின்னரும் கிஷோர் செல்போனை எடுக்கவில்லை.
இது குறித்து கிஷோரின் நண்பர்களிடம் அவர் தெரிவித்து விடுதி அறைக்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். நண்பர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது விடுதி அறையில் ஜன்னல் கம்பியில் துணி கட்டி தூக்குப்போட்டு கிஷோர் தற்கொலை செய்தது தெரியவந்தது.
சாவில் சந்தேகம்
இது குறித்து திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று கிஷோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிஷோரின் நண்பர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடித்துக்கொலையா?
இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கல்லூரி விடுதியில் தங்கி சிவில் என்ஜினீயரிங் பயின்ற கோகுல் என்பவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது
இந்த கல்லூரியில் இது போன்ற தற்கொலை சம்பவம் தொடர்ந்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது. கிஷோரை யாரேனும் அடித்துக்கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்ற சந்தேகமும் உறவினர்களிடையே ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story