ஓடும் பஸ்களில் செல்போன்கள் திருடிய பெண் கைது மடியில் கட்டியிருந்த 5 செல்போன்கள் மீட்பு
ஓடும் பஸ்சில் செல்போன்கள் திருடி வந்த பெண் திருவான்மியூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை,
சென்னை திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக பெண் ஒருவர் சுற்றிக் கொண்டிருந்தார். கர்ப்பிணி போல அந்த பெண்ணின் வயிறு பெரிதாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த திருவான்மியூர் போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது பெரிதாக இருந்த அந்த பெண்ணின் மடிப்பகுதியில் சேலை அவிழ்ந்து ஏராளமான செல்போன்கள் கீழே விழுந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அதுபற்றி விசாரித்தபோது, அவை திருட்டு செல்போன்கள் என்று தெரிய வந்தது.
கைது
அந்த பெண்ணின் பெயர் பானு (வயது 40) என்றும், அவர் கல்பாக்கத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இவர் ஓடும் பஸ்களில் ஆண்களிடமும், பெண்களிடமும் நைசாக பேசி செல்போன்களை திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கோவில் திருவிழா கூட்டத்திலும் புகுந்து செல்போன்களை திருடுவார்.
இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 5 செல்போன்கள் மீட்டனர். மடியில் கட்டியிருந்த செல்போன்களை அவர் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.
Related Tags :
Next Story