ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் விட்டு தேர்வு செய்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் வீரராகவராவ் எச்சரிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் விட்டு தேர்வு செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டரும் தேர்தல் அலுவலருமான வீர ராகவராவ் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரும் தேர்தல் அலுவலருமான வீரராகவராவ் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக வரும் 27-ந் தேதி ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை ஆகிய 5 யூனியன்களுக்கும், 30-ந் தேதி பரமக்குடி, போகலூர், நயினார்கோவில், முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய 6 யூனியன்களுக்கும் நடைபெறுகிறது.
மொத்தம் உள்ள 3 ஆயிரத்து 691 பதவிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு இளஞ் சிவப்பு நிறத்திலும், யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.
தேர்தலையொட்டி முதல்கட்ட வாக்குப்பதிவிற்கு 813 வாக்குச்சாவடிகளும், 2-ம் கட்ட வாக்குப்பதிவிற்கு ஆயிரத்து 6 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். இந்த தேர்தலில் கடந்த சட்டமன்ற ெதாகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தற்போதைய நிலவரப்படி 4 லட்சத்து 25 ஆயிரத்து 72 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 881 பெண் வாக்காளர்களும், 40 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 8 லட்சத்து 49 ஆயிரத்து 993 வாக்காளர்களும் உள்ளனர்.
தேர்தலுக்கு மாவட்டம் முழுவதும் 14 ஆயிரத்து 15 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தலில் 5 ஆயிரத்து 386 வாக்குபெட்டிகள் பயன்படுத்த தயார் நிலையில் உள்ளன. மக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை அந்தந்த யூனியன் பகுதிகளில் அமைக்கப்படும். வாக்குஎண்ணிக்கை மையங்களில் நடைபெறும். 98 பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், 26 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை வாக்களிப்பின் மூலம் பதிவு செய்து உரிமையை நிலைநாட்ட வேண்டும். எந்த வகையிலும் ஜனநாயக விரோத செயலுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது. மாவட்டத்தில் ஏனாதி கிராமம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் முறையில் தேர்வு செய்வதாக தொலைபேசி புகார்கள் வந்துள்ளன. அந்த பகுதிகளில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை மூலம் அதிகாரிகள் குழுவினர் நேரில் சென்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதுபோன்று பதவியை ஏலம் முறையில் தேர்வு செய்வது குறித்து விசாரணையில் தெரியவந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் இதுபோன்று தவறு நடைபெறுவதாக தெரியவந்தால் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் செய்ய வேண்டும். உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தேர்தலில் பிளக்ஸ்போர்டு அரசின் தடை காரணமாக முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. சுவர் விளம்பரங்கள் தனியார் இடங்களில் முன்அனுமதி பெற்று மட்டுமே செய்து கொள்ளலாம். அரசு இடங்களில் எந்த விளம்பரமும் செய்ய கூடாது. மாவட்டம் முழுவதும் தேர்தலையொட்டி 3 யூனியன் பகுதிக்கு ஒரு பறக்கும்படை வீதம் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். அப்போது கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், தேர்தல் பிரிவு தாசில்தார் கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story