பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு


பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு
x
தினத்தந்தி 12 Dec 2019 11:00 PM GMT (Updated: 12 Dec 2019 2:42 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கு ஆங்கில தேர்வு நடந்தது.

பெரம்பலூர்,

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கான அரையாண்டு தேர்வு நேற்று முன்தினம் தமிழ் தேர்வுடன் தொடங்கியது. நேற்று ஆங்கிலத்தேர்வு நடந்தது. அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளிலும் நேற்று பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு ஆங்கில தேர்வு நடந்தது. பிளஸ்-2 பயிலும் மாணவ- மாணவிகளுக்கு காலை 10.15 மணிக்கு தொடங்கிய ஆங்கில தேர்வு மதியம் 1.15 வரை நடந்தது. இதேபோல் பிளஸ்-1 பயிலும் மாணவ- மாணவிகளுக்கு மதியம் 2.15 மணிக்கு தொடங்கிய ஆங்கில தேர்வு மாலை 5.15 மணி வரை நடந்தது.

தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பு வரை மாணவ- மாணவிகள் தேர்விற்காக ஆர்வத்துடன் படித்து கொண்டிருந்ததை காணமுடிந்தது. தேர்வு எழுத தேர்வறைக்கு சென்ற மாணவ- மாணவிகளை அறை கண்காணிப்பாளரான ஆசிரியர்கள் சோதனை செய்து, உள்ளே அனுமதித்தனர். தேர்வு எழுத எழுதுபொருட்கள் மட்டுமே கொண்டு செல்ல மாணவ- மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆங்கில தேர்வு

பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில தேர்வினை பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ- மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்விற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் தலைமையிலான ஆசிரியர்கள் செய்திருந்தனர். தேர்வு அறையில் காப்பி அடிக்கிறார்களா? என்பதனை கண்காணிக்க பறக்கும் படை போல ஆசிரியர்கள் தேர்வு நடக்கும் போது மாணவ- மாணவிகளை கண்காணித்து வந்தனர். மேலும் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத உள்ளிட்ட மாற்றுத்திறனாளி 10 மாணவ- மாணவிகளுக்கு தேர்வு எழுத வசதியாக தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு, உதவியாளராக நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு ஆசிரியைகள் எழுதினர். இன்று (வெள்ளிக்கிழமை) பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய வகுப்புகளுக்கு தேர்வு கிடையாது. நாளை (சனிக்கிழமை) பிளஸ்-1 வகுப்புக்கு இயற்பியல், பொருளாதாரம் கணினி தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகளும், பிளஸ்-2 வகுப்புகளுக்கு கணிதம், வணிகவியல், விலங்கியல், வேளாண்மை அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகளும் நடைபெறவுள்ளன.

Next Story