நெமிலி அருகே, வகுப்பறையில் படுத்து தூங்கிய ஆசிரியர் - அதிகாரிகள் விசாரணை


நெமிலி அருகே, வகுப்பறையில் படுத்து தூங்கிய ஆசிரியர் - அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 13 Dec 2019 4:15 AM IST (Updated: 12 Dec 2019 10:33 PM IST)
t-max-icont-min-icon

நெமிலி அருகே உடல்நலக் குறைவால் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் படுத்து தூங்கினார். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பனப்பாக்கம், 

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த காட்டுப்பாக்கம் ஊராட்சி கன்னிகாபுரத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு 40-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக சிவக்குமார் என்பவரும், உதவி ஆசிரியராக மோகன் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி மோகன் தனக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளதால் ஒருநாள் விடுப்பு வழங்கும்படி தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் நெமிலி வட்டார வளமையத்தில் தணிக்கை குறித்த ஆய்வு நடக்கிறது. அதில் நான் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். நீங்கள் பள்ளிக்கு வந்துவிடுங்கள் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்குடன் வந்த மோகன், மாணவ-மாணவிகளிடம் தனக்கு மிகவும் உடல்நிலை சரியில்லை என்றும், அமைதியாக படிக்குமாறு கூறிவிட்டு மாத்திரை சாப்பிட்டுவிட்டு வகுப்பறையில் படுத்து தூங்கினார்.

பாடம் நடத்தாமல் ஆசிரியர் தூங்குவதை பார்த்தசிலர் வீடியோ எடுத்து அதனை வாட்ஸ்-அப்பில் பரப்பினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் நெமிலி வட்டார கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயராஜி, சம்பத்குமார், அலுவலக கண்காணிப்பாளர் பசுபதி ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார், உதவி ஆசிரியர் மோகன் மற்றும் மாணவ-மாணவிகளிடம் நேரடி விசாரணை நடத்தினர். மேலும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர், பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, ஆசிரியர் மோகன் நன்றாக பாடம் எடுக்கக்கூடிய ஆசிரியர். உடல்நல குறைவால் தான் அவர் படுத்து தூங்கினார். அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், மேலாண்மை குழு தலைவர் ஆகியோர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதுதொடர்பான விவரங்களை அறிக்கையாக முதன்மை கல்வி அலுவலருக்கு வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜி அனுப்பி உள்ளார்.

Next Story