மாவட்ட செய்திகள்

உடுமலை அருகே, பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை பிடிக்க கூண்டு அமைப்பு + "||" + Near Udumalai Damage to crops Hogs Cage system to capture

உடுமலை அருகே, பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை பிடிக்க கூண்டு அமைப்பு

உடுமலை அருகே, பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை பிடிக்க கூண்டு அமைப்பு
உடுமலை அருகே பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு அமைக்கப்பட்டது.
தளி, 

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியை ஒட்டி ஏராளமான கிராமங்கள் உள்ளன.

இங்கு வாழை, மக்காச்சோளம், தென்னை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர். இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

உடுமலை பகுதியில் தற்போது அதிக அளவில் மக்காச்சோள சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வயல்வெளியில் நுழையும் காட்டுப்பன்றிகள் பயிர்களை அதிகளவில் சேதப்படுத்தி வருகிறது. அதை தடுப்பதற்காக விவசாயிகள் குழுவாக இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் காட்டு பன்றிகள் விவசாயிகளை ஏமாற்றி விட்டு தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

அது மட்டுமல்லாமல் வயல்வெளிகளுக்கு செல்லும் கால்நடைகள் மற்றும் மனிதர்களையும் தாக்குவதற்கான சூழல் நிலவுகிறது. மேலும் வனத்தில் இருந்து வெளியேறும் காட்டுப்பன்றிகள் மலையடிவாரத்தில் உள்ள புதர்களில் தங்கியிருந்து தொடர்ச்சியாக பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. வனத்தைவிட்டு வெளியில் தங்கியிருந்து சேதத்தை ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன் வருகி்ற 17-ந் தேதி மாவட்ட வன அலுவலகத்தில் விவசாயிகள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வயல்வெளியில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை பிடிப்பதற்காக உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் மேற்பார்வையில் வனத்துறையினர் சர்க்கார்புதூர் பகுதியில் கூண்டு அமைத்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை பிடிப்பதற்காக உடுமலை அருகே தீபாலபட்டி பகுதியில் முதல்கட்டமாக ஒரு கூண்டு அமைத்துள்ளோம். அதில் பன்றிகளுக்கு விருப்ப உணவான பழவகைகள் மற்றும் கரும்பு உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளது. அவற்றை ருசிப்பதற்காக வரும் காட்டு பன்றிகள் அதில் சிக்கிக்கொள்ளும். கூண்டுக்குள் ஒருமுறையில் பெரிய பன்றி ஒன்று அல்லது 6 குட்டிகளை பிடிக்கலாம். மேலும் வால்பாறை பகுதியில் இருந்து 5 கூண்டுகள் கொண்டு வரப்படவுள்ளது.

பிடிபடும் காட்டுப்பன்றிகள் மீண்டும் ஊருக்குள் வராத வண்ணம் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்படும். அத்துடன் காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக உடுமலை வனச்சரக அலுவலர் தனபால் தலைமையிலான வனத்துறையினர் தினந்தோறும் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...