திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 1,132 பேர் வேட்பு மனு தாக்கல்


திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 1,132 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 12 Dec 2019 10:15 PM GMT (Updated: 12 Dec 2019 8:18 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு இதுவரை 1,132 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27-ந் தேதி, 30-ந் தேதி ஆகிய நாட்களில் 2 கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள், 2 ஆயிரத்து 295 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஊரக பகுதியில் மொத்தம் 9 லட்சத்து 95 ஆயிரத்து 765 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தலை நடத்துவதற்கு 28 தேர்தல் நடத்தும் அதிகாரிகள், 363 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும், மற்ற பதவிகளுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந்தேதி முதல் தொடங்கியது. நேற்று முன்தினம் வரை 675 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.நேற்று ஒரே நாளில்கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 364 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 66 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 26 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும் என மொத்தம் 457 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

நேற்று வரை கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 835 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 229 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 62 பேரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 6 பேரும் என மொத்தம் 1,132 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நாளையும் (சனிக்கிழமை) வேட்பு மனுதாக்கல் நடக்கிறது. வருகிற 16-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கிறது.

Next Story