சிதம்பரம், புவனகிரியில், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு


சிதம்பரம், புவனகிரியில், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 12 Dec 2019 10:15 PM GMT (Updated: 12 Dec 2019 8:31 PM GMT)

சிதம்பரம் மற்றும் புவனகிரியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் அன்புசெல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிதம்பரம், 

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் தேர்தலுக்காக, சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் அன்புசெல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கான வசதிகள் உள்ளதா? குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? என ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஊராட்சி உதவி இயக்குனர் ஆனந்தன், சப் கலெக்டர் (பொறுப்பு) விஜயராகவன் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் குமராட்சி கற்பகம், கீரப்பாளையம் ஜெயக்குமர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமராட்சி விமலா, கீரப்பாளையம் பாலகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பலராமன், சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ், சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஹேமலதா உள்பட பலர் உடன் இருந்தனர்.

இதேபோல் கீரப்பாளையம் ஒன்றியத்தில் நடைபெறும் தேர்தலுக்காக சிதம்பரம் ரெயில்வே பீடர்ரோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வாக்கு எண்ணும் மையமாகவும், புவனகிரி ஒன்றியத்தில் நடைபெறும் தேர்தலுக்காக புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையமாகவும், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் தேர்தலுக்காக சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாக்கு எண்ணும் மையங்களையும் கலெக்டர் அன்புசெல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், வாக்கு எண்ணும் மையத்தில் அடிப்படை வசதிகளை முறையாக அமைக்க வேண்டும், மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றார். இந்த ஆய்வின் போது புவனகிரி தாசில்தார் சத்தியன், வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்ராஜ், ஒன்றிய பொறியாளர் சுரேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, வருவாய் ஆய்வாளர் ஆனந்தி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் தேர்தலுக்காக அங்குள்ள ஆர்.சி.உயர்நிலைப்பள்ளியை வாக்கு எண்ணும் மையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தையும் கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார்.அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமச்சந்திரன், தாசில்தார் தமிழ்செல்வன், சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பபிரண்டு ஜவகர்லால், காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story