சென்னையில் கைவினை பொருட்கள் கண்காட்சி 15-ந்தேதி வரை நடக்கிறது
சென்னையில் நபார்டு வங்கி சார்பில் கைவினை பொருட்கள் கண்காட்சி வரும் 15-ந்தேதி வரை நடக்கிறது.
சென்னை,
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி(நபார்டு) சார்பில் தேசிய அளவிலான கிராமப்புற கைவினைஞர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சி தொடக்க நிகழ்ச்சி நேற்று சென்னை வள்ளுவர்கோட்டம் அன்னை தெரேசா பெண்கள் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகம் தலைமை தாங்கி, கண்காட்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கைத்தறி, கைத்திறன், ஜவுளி மற்றும் காதி துறையின் முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் எஸ்.பி.கார்த்திகா, நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் பத்மா ரகுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
100-க்கும் மேற்பட்ட பொருட்கள்
வரும் 15-ந்தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாய சங்கங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களது பொருட்களை கண்காட்சிக்கு வைத்தனர். இந்த கண்காட்சியில் தஞ்சாவூர் ஓவியங்கள், புவனேசுவரில் இருந்து வந்த பட்டசித்ரா மர ஓவியங்கள், ஐதராபாத்தை சேர்ந்த கலம்காரி புடவைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கே.சண்முகம் பேசியதாவது:-
நபார்டு வங்கி, மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி உள்கட்டமைப்பு பணிக்காக வழங்குகிறது. தமிழகத்துக்கு பல்வேறு விதமான புதிய திட்டங்களுக்கு நபார்டு வங்கியின் உதவியை பெற்று தான் செய்து வருகிறோம். நபார்டு வங்கி, கிராமப் பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், விவசாய விலை பொருட்களுக்கான சங்கங்கள், கைவினை பொருட்கள் தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு வேலை வாய்ப்பு, வருமானங்கள் பெருக்குவதற்கு உதவி செய்து வருகிறது. இந்த கண்காட்சியை போல் கைத்தறி, நெசவாளர்துறை அனைவரும் இணைந்து பெரிய அளவில் இதைப்போல் கண்காட்சி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story