மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும், மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை - கலெக்டர் தகவல்


மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும், மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 12 Dec 2019 10:15 PM GMT (Updated: 12 Dec 2019 11:12 PM GMT)

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார். கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை, 

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மட்டும் பயன்பெற முடியும். மேலும் கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்கள் மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், என்.ஐ.டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயில வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இதற்குரிய விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து தரலாம். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு ரூ.2.லட்சம் வரை வழங்கப்படும். மேலும் விவரங்களை https://sivaganga.nic.in என்ற இணையதள முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Next Story