செய்யாறு அருகே, தலைமைஆசிரியையை கீழே தள்ளி 5 பவுன் நகை பறிப்பு


செய்யாறு அருகே, தலைமைஆசிரியையை கீழே தள்ளி 5 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 14 Dec 2019 4:00 AM IST (Updated: 13 Dec 2019 6:46 PM IST)
t-max-icont-min-icon

செய்யாறு அருகே ஸ்கூட்டர் மீது மோட்டார்சைக்கிளை மோதவிட்ட மர்மநபர்கள் தலைமை ஆசிரியையை கீழே தள்ளி அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர்.

செய்யாறு,

செய்யாறு டவுன் கன்னுகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி தேன்மொழி (வயது 48), பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் உள்ளாட்சி தேர்தல் பணிக்காக உதவித்தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மேல்கொளத்தூர் ஊராட்சி அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக அவர் ஸ்கூட்டரில் மேல்கொளத்தூருக்கு சென்று கொண்டிருந்தார்.

மற்றொரு மோட்டார்சைக்கிளில் மர்மநபர்கள் இவரை பின்தொடர்ந்து சென்றனர். செங்காடு அருகே சென்றபோது மர்மநபர்கள் தங்களது மோட்டார்சைக்கிளை தலைமைஆசிரியை தேன்மொழியின் ஸ்கூட்டரில் மோதினர். இதில் தேன்மொழி நிலைதடுமாறி விழுந்தார். அப்போது அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்துக்கொண்டு மின்னல்வேகத்தில் தப்பிச்சென்றனர்.

இது குறித்து அனக்காவூர் போலீஸ் நிலையத்தில் தலைமை ஆசிரியை தேன்மொழி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாராம் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

செய்யாறு டவுன் வேல்சோமசுந்தரம் நகரை சேர்ந்த சதீஷ் (வயது 30). இவர் செய்யாறு – காஞ்சீபுரம் சாலையில் மோட்டார் சைக்கிள் ஷோரூம் வைத்துள்ளார். சம்பவத்தன்று சதீஷ் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றனர். பின்னர் வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியுடன் உள்ளே சென்றபோது பீரோவும் திறக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து செய்யாறு போலீஸ் நிலையத்தில் சதீஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையுடன் தப்பிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Next Story