செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் ‘திடீர்’ சாவு


செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் ‘திடீர்’ சாவு
x
தினத்தந்தி 14 Dec 2019 4:30 AM IST (Updated: 13 Dec 2019 7:22 PM IST)
t-max-icont-min-icon

செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் திடீரென இறந்ததால் டாக்டர்களை கண்டித்து மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்யாறு, 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா புளியரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 46). இவரது மனைவி வினித்ரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவரை பிரசவத்திற்காக செய்யாறில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அரவிந்த் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் ஆண் குழந்தை பிறந்தது. வினித்ராவுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் 2- வது குழந்தையும் பிறந்ததால் அவர் மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

பின்னர் தாயும் சேயும் நலமாக இருந்த நிலையில் தாய் வினித்ராவிற்கு நேற்று வலி அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி வினித்ரா சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

அவரது இறப்புக்கு டாக்டர்கள் சரியான சிகிச்சை அளிக்காததே காரணம் என குற்றம்சாட்டி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர். எனவே இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

தகவல் அறிந்த சுகாதார இணை இயக்குனர் அன்பரசி, மருத்துவ அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் இணை இயக்குனர் அன்பரசி கூறுகையில் ‘‘இந்த பிரச்சினை குறித்து துறைரீதியாக முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதியளித்தார். இதனை ஏற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story