பாலாற்றில் மணல் கடத்தலுக்காக பயன்படுத்துப்படும் சாலை உடனடியாக அகற்ற குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
பாலாற்றில் மணல் கடத்தலுக்காக பயன்படுத்தப்படும் சாலையை அப்புறப்படுத்த வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு உதவி கலெக்டர் இளம் பகவத் தலைமை தாங்கினார்.
இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பேசியதாவது:-
சாத்தம்பாக்கத்திற்கு வரும் அரசு பஸ் அடிக்கடி நிறுத்தப்படுகிறது. எனவே பஸ் சரிவர வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், மணல் குவாரி அமைப்பதற்காக பாலாற்றில் முன்பு சாலை போடப்பட்டது. அந்த சாலை தற்போதும் இருப்பதால் மணல் கடத்துபவர்கள் அந்த சாலையை உபயோகிக்கின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
சாத்தம் பகுதி பாலாற்றில் மணல் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும். நவ்லாக் பண்ணையில் தென்னங்கன்று அதிகம் உற்பத்தி செய்து தேங்காயை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு தர வேண்டும். லாலாப்பேட்டை அரசினர் பள்ளி, அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் வேகத்தடை ஏற்படுத்த வேண்டும்.
திண்டிவனம் - நகரி ரெயில் பாதை திட்டத்துக்காக அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தவிர அதே சர்வே எண்ணில் உள்ள இடங்களை விற்பனை செய்ய தடை உள்ளது. நீண்டகாலமாக உள்ள இந்த தடையை விலக்கி கையகப்படுத்திய இடத்தை தவிர மற்ற இடத்தை விவசாயிகள் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள ஐ.வி.பி.எம். இடத்திலேயே கட்ட வேண்டும். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலேயே அடுத்து வரும் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தை நடத்த வேண்டும்.
ராணிப்பேட்டை பகுதியில் நடைபெறும் காட்டன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு தராசு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விற்கும் நெல்லுக்கு காலதாமதமாக பணம் வழங்கப்படுகிறது. இதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்ராவரம் அருகே உள்ள பழுதடைந்த மலைமேடு- பெல் சாலையை சீரமைக்க வேண்டும்.
கலவையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வரும் விவசாயிகளிடம், வியாபாரிகள் நேரடியாக தொடர்பு கொண்டு நெல் வாங்குவதை தடை செய்ய வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமே ஏல முறையில் விற்பனை செய்ய வேண்டும்.
வடகால் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும், பழுதடைந்துள்ள நரசிங்கபுரம்- அவரக்கரை சாலையை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.
கூட்டத்தில் எல்.சி.மணி, எல்.சி.சண்முகம், கோபாலகிருஷ்ணன், ஏகாம்பரம், ரகுபதி, பாரதி உள்பட விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் பல்வேறு துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story