வேலூர் மாவட்டத்தில் எருதுவிடும் விழாவில் பங்கேற்கும் காளைகளின் விவரங்கள் ஆன்லைனில் பதிவு - கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவு
வேலூர் மாவட்டத்தில் நடக்கும் எருதுவிடும் விழாவில் பங்கேற்கும் காளைகளின் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
அடுக்கம்பாறை,
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை மற்றும் உழவர் திருநாள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டு பொங்கல் பண்டிகையன்று விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் பசுக்கள் மற்றும் காளைகளுக்கு அலங்காரம் செய்து, அதற்கென பொங்கல் வைத்து, இறைவனுக்கு படையலிட்டு மாடுகளை கடவுளாக பாவித்து வழிபடுவர்.
அந்த மாட்டுப் பொங்கல் பண்டிகையன்று தென் தமிழகத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டும், வட தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஒசூர் உள்ளிட்ட இடங்களில் மஞ்சுவிரட்டு என அழைக்கப்படும் எருதுவிடும் விழாவும் நடத்தப்படுகிறது. இந்த விழாக்களை தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கணியம்பாடி, அடுக்கம்பாறை, மேட்டு இடையம்பட்டி, சாத்துமதுரை, ஊசூர், அணைக்கட்டு, ஒடுகத்தூர், சோழவரம், லத்தேரி, தொண்டான்துளசி, மேலக்குப்பம் உள்ளிட்ட ஊர்களில் காளைமாடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகை வருவதற்கு ஒருசில நாட்களே உள்ள நிலையில், காளை மாடுகளை போட்டிக்கு தயார்படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி காளைகளுக்கு மணல் குவியலை குத்தி கிளறுதல், நீச்சல், நடைபயிற்சி, ஓட்டம், மணல் மூட்டைகளை இழுத்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும் கேழ்வரகு, கம்பு, சோளம், மக்காச்சோளம், நவதானிய கூழ், கோதுமை தவிடு, கொள்ளு, பால், நாட்டுக்கோழி முட்டை, ஆட்டுக்கால் சூப் உள்ளிட்ட சத்துள்ள உணவுகளையும் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் எருதுவிடும் விழாவில் பங்கேற்கும் காளைகளின் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 2020-ம் ஆண்டு, ஜனவரி மாதத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் எருதுவிடும் விழாக்களில் கலந்துகொள்ளும் காளைகளின் விவரத்தை ஆன்லைனில் பதிவு செய்வதுடன், அந்த விவரம் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.
கிராமங்கள் தோறும் காளைமாடுகளின் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் பணியில் தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் காளைகளின் உரிமையாளரின் ஆதார் அட்டை எண் மற்றும் விலாசம், காளையின் பெயர், காளையின் நிறம் மற்றும் ரகம், காளையின் வயது, காளையின் முழுப் புகைப்படம் உள்ளிட்டவைகள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story