கனமழையில் இருந்து பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் - கலெக்டர் ரத்னா அறிவுரை


கனமழையில் இருந்து பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் - கலெக்டர் ரத்னா அறிவுரை
x
தினத்தந்தி 14 Dec 2019 4:00 AM IST (Updated: 13 Dec 2019 9:53 PM IST)
t-max-icont-min-icon

கனமழையில் இருந்து விவசாயிகள் பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா அறிவுரை கூறினார். அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரியலூர், 

அரியலூர் மாவட்டத்தில் சம்பா நெல் 20 ஆயிரம் எக்டரிலும், தானிய பயிர்கள் 16 ஆயிரத்து 400 எக்டரிலும், பயறு வகை பயிர்கள் 4 ஆயிரத்து 720 எக்டரிலும், எண்ணெய் வித்துக்கள் 3 ஆயிரத்து 475 எக்டரிலும், பருத்தி 9 ஆயிரத்து 360 எக்டரிலும் மற்றும் கரும்பு 4 ஆயிரத்து 320 எக்டரிலும் என 58 ஆயிரத்து 275 எக்டரில் வேளாண்மை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கனமழையில் இருந்து விவசாயிகள் தங்களது பயிர்களை காத்துக்கொள்ள வேளாண்மைத்துறையினரால் வெளியிடப்பட்டுள்ள தொழில்நுட்ப வழிமுறைகள் வருமாறு:-

சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலில் கனமழையால் தேங்கும் நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்து விட வேண்டும். அதிக நாட்கள் நீரின் தேக்கத்தினால் தழை மற்றும் ஜிங்க் சத்துகள் குறைபாடு ஏற்பட்டு இளம் பயிர்கள் இளமஞ்சள் அல்லது மஞ்சளாக மாறும் பட்சத்தில் தண்ணீரை வடித்தவுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமிட வேண்டும். பயிர் தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் தண்ணீர் தேக்கத்தினால் பாதிக்கப்பட்டால், 4 கிலோ டி.எ.பி.-யினை 10 லிட்டர் நீரில் முந்தைய நாள் மாலை வேளையில் கரைத்து மறுநாள் வடிகட்டி அதனுடன் 2 கிலோ யூரியாவினை 190 லிட்டர் நீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமிட வேண்டும்.

தண்ணீர் தேக்கத்தினால் பயிர் வளர்ச்சி குன்றி காணப்பட்டால் தண்ணீரை வடித்தவுடன் ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன், ஜிப்சம் 18 கிலோ மற்றும் வேப்பம் புண்ணாக்கு 4 கிலோவினை ஒரு நாள் இரவு கலந்து வைத்து 17 கிலோ பொட்டா‌‌ஷ் கலந்து மேலுரமிட வேண்டும். நெற் பயிர் அதிக நாட்கள் நீரில் மூழ்கும் பட்சத்தில் நெல் குருத்து ஈ, இலை சுருட்டுப் புழு, பச்சை தத்துப்பூச்சி, குலை நோய், இலை உரை கருகல் நோய் போன்ற பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கட்டுப்படுத்த புராபனபாஸ் 50 சதவீதம் பூச்சிக்கொல்லியினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி லிட்டர் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.பருத்தியை மழை நீரிலிருந்து பாதுகாக்க, வயல்களில் தேங்கும் நீரை, ஐந்து பாத்திகளுக்கு இடையே பார் அமைத்து, வயலை சுற்றி வடிகால் வசதி செய்து தேங்கிய நீரை வெளியேற்ற வேண்டும். பருத்தி செடிகளில் வேர் அழுகல் நோய் காணப்படும் போது சூடோமோனஸ் ஒரு லிட்டருக்கு 2 கிராம் கலந்து செடிக்கு செடி வேர் பகுதிகளில் ஊற்றுவதன் மூலம் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம். பருத்தி இலைகளில் இலைப்புள்ளிகள் தென்படும்போது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 30 கிராம், ஸ்டிரெப்டோமைசின் சல்பேட் ஒரு கிராம் ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து 10-15 நாட்கள் இடைவெளியில் இலையின் மீது தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும் மழை நின்ற பிறகு, செடிகள், சப்பைகள் நன்கு செழிப்புடன் இருக்க, வளர்ச்சி ஊக்கி அல்லது டி.ஏ.பி. ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் அல்லது 19:19:19 என்ற நீரில் கரையும் உரத்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் கலந்து தெளிக்க வேண்டும். இலைகள் சிவப்பாக தென்படும் போது மெக்னீசியம் சல்பேட் 100 கிராம், ஜிங் சல்பேட் 50 கிராம், யூரியா 10 கிராம் ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

கரும்பு வயலில் மழை நீரால் அனைத்து சத்துகளும் அடித்து சென்றுவிடுவதால் நுண்ணூட்ட சத்து பற்றாக்குறை ஏற்படும், இதனை சரிசெய்ய ஒரு ஏக்கருக்கு பெர்ரஸ் சல்பேட் 12 கிலோ மற்றும் யூரியா 20 கிலோ தேவையான அளவு மணல் கலந்து இட வேண்டும் அல்லது 0.5 சதவீதம் பெர்ரஸ் சல்பேட் இலை வழியாக தெளிக்க வேண்டும். உளுந்து வயலில் மழைநீர் வடிந்தவுடன் 19:19:19 என்ற நுண்ணூட்ட கலவையை 1 லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். பூக்கள் அதிகம் பூப்பதற்கு பயிறு அதிசயம் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்

இதுதவிர இயற்கை இடர்பாடுகளினால் பயிர் சேதத்தினை ஈடு செய்திட பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் காப்பீடு செய்திடலாம். அரியலூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்திட நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை கால அவகாசம் உள்ளது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story