3 பெண் குழந்தைகளை கொன்று, தம்பதி தற்கொலை, லாட்டரி மோகத்தால் ஒரு குடும்பமே சிதைந்த சோகம்
லாட்டரியில் பெருமளவில் பணத்தை இழந்ததால் சயனைடு கொடுத்து 3 பெண் குழந்தைகளை கொன்று விட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் சித்தேரிக்கரை சலாமத் நகரில் வசித்து வந்தவர் அருண்(வயது 33). இவர் அதே பகுதியில் பட்டறை வைத்து நகை தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி சிவகாமி(26). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. பிரியதர்ஷினி (6), யுவஸ்ரீ (3) மற்றும் 4 மாத கைக்குழந்தையான பாரதி ஆகிய 3 பெண் குழந்தைகள் இருந்தனர். ஆரம்ப காலத்தில் நகை தொழிலில் அருணுக்கு நல்ல வருமானம் கிடைத்தது. இந்த வருமானத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் மீனாட்சி நகர் பகுதியில் 50 லட்சம் ரூபாய்க்கு சொந்தமாக வீடு கட்டி குடியேறினார். அதன் பிறகுதான் அவர் எதிர்பார்க்காத வகையில் நகை தொழிலில் அவருக்கு பெரும் சரிவு ஏற்பட்டது. அந்த சரிவை சமாளிக்க வெளியில் சிலரிடம் கடன் வாங்கினார்.
மேலும் விழுப்புரம் பகுதியில் ரகசியமாக விற்கப்படும் 3 நம்பர் லாட்டரி வாங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்றும், அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து மொத்த கடனையும் அடைத்துவிட்டு நிம்மதியாக வாழலாம் என்றும் எண்ணிய அருண், லாட்டரி மோகத்திற்கு மாறினார். எல்லா வருமானத்தையும் லாட்டரியிலேயே போட்டுள்ளார். இந்த லாட்டரியால் அவருக்கு எந்த அதிர்ஷ்டமும் கிடைக்கவில்லை. மாறாக அவரிடம் இருந்த பணத்தையும் லாட்டரி சீட்டு வாங்கி பெரும் நஷ்டத்தை சந்தித்தார்.
ஒரு கட்டத்தில் நகை பட்டறையை அவரால் தொடர்ந்து நடத்த முடியவில்லை. பட்டறையில் வேலை செய்த தொழிலாளர்களும் நின்றுவிட்டனர். இதனால் சொந்த பட்டறையை விட்டுவிட்டு நண்பர்கள் சிலரின் பட்டறையில் கூலிக்கு வேலை பார்த்தார்.
தான் சொந்தமாக வீடு கட்டிய 1½ வருடத்திலேயே அந்த வீட்டையும் விற்று கடனை அடைத்து விழுப்புரம் சித்தேரிக்கரை சலாமத் நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினார். 3 பெண் குழந்தைகள் என்பதால் அவர்களை எப்படி வளர்த்து கரை சேர்க்கப்போகிறோம் என்று மிகவும் வருத்தத்தில் இருந்தார்.
இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு சென்றார். தனது முடிவை மனைவி சிவகாமியிடம் தெரிவித்தார். அவரும் சம்மதித்தார். இருவரும் தற்கொலை செய்துகொண்டால் தங்களது குழந்தைகளை யார் கவனிப்பார்கள், அவர்கள் அனாதையாகி விடுவார்களே என்று எண்ணிய அவர்கள் இருவரும் தாங்கள் செல்லும் இடத்திற்கே பெற்ற பிள்ளைகளையும் அழைத்துச்சென்று விட வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் வெளியே சென்ற அருண், இரவு 9.30 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அங்கு குழந்தைகள் 3 பேரும் தங்களுக்கு நிகழப்போகும் கதியை அறியாமல் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
பின்னர் வீட்டில் இருந்த நகை தொழிலுக்காக பயன்படுத்தப்படும் சயனைடு பவுடரை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்தனர். தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை ஒவ்வொருவராக சிவகாமி எழுப்பி தன் மடியில் கிடத்தி கண்ணீர் மல்க சயனைடு விஷம் கலந்த தண்ணீரை கொடுத்துள்ளார். குழந்தைகளும் அரைகுறை தூக்கத்திலேயே அதை குடித்தனர். அடுத்த சில நிமிடங்களில் 3 பேருமே வாயில் நுரைதள்ளியபடி படுத்த படுக்கையிலேயே மயங்கி விழுந்தனர். இதனை அருண் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
பின்னர் அருண், சிவகாமி தம்பதியினர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அதற்கான காரணம் குறித்து உருக்கமாக பேசி செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை தன்னுடைய நண்பர்கள் குழுவில் அருண் பகிர்ந்தார். அதன் பின்னர் தங்களுடைய பிள்ளைகளுக்கு கொடுத்த அதே சயனைடு கலந்த தண்ணீரை அருணும், சிவகாமியும் குடித்துவிட்டனர்.
இதனிடையே இரவு 11 மணியளவில் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த அருணின் நண்பர்கள், அவரது வீட்டுக்கு பதறியடித்துக்கொண்டு ஓடோடி வந்தனர். அங்கு வீட்டின் உள்ளே 3 குழந்தைகள் மற்றும் மனைவி சிவகாமி ஆகியோரை கட்டியணைத்தபடி அருண் மயங்கிய நிலையில் கிடந்தார்.
உடனே இதுபற்றி அவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், அருண் உள்பட 5 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் அருணின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு திரண்டு சென்றனர். அங்கு அருண் உள்ளிட்ட 5 பேரின் உடலையும் பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.
5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நகை தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவும், லாட்டரியில் பணத்தை இழந்ததாலும் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story