பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனுக்கள் பெறும் பணி தீவிரம்
கரூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒன்றிய அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் பெறும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரூர்,
கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கரூர், தாந்தோணி, க.பரமத்தி உள்ளிட்ட 8 ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர். ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டங் களாக தேர்தல் நடைபெறஉள்ளது. இதையொட்டி கடந்த 9-ந்தேதியிலிருந்து வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு மட்டும் அந்தந்த ஊராட்சி செயலரிடம் வேட்புமனு பெறப்படுகிறது. மற்ற 3 பதவிகளுக்கும் ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன.
இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) அதிகாரிகள் வேட்புமனுக்களை பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. எனினும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தவிர்த்து 16-ந்தேதியுடன் (திங்கட் கிழமை) மனுக்கள் பெறுவது நிறைவு பெறுகிறது. இதையொட்டி அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு செய்வதில் தீவரமாக இறங்கியுள்ளன. இதற்கிடையே கட்சியினர் ஆங்காங்கே வேட்புமனுதாக்கலையும் துரிதப்படுத்தி தான் வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று காலை முதலே கரூர், தாந்தோணி உள்ளிட்ட ஒன்றிய அலுவலகங்களில் கிராம ஊராட்சி தலைவர் உள்ளிட்டவற்றுக்கு வேட்புமனுதாக்கல் செய்ய கோயம்பள்ளி, செல்லிபாளையம், பஞ்சமாதேவி, வாங்கல், ஆத்தூர் பூலாம்பாளையம், மண்மங்கலம், சின்னஆண்டாங்கோவில் உள்ளிட்ட ஊரக பகுதிகளில் இருந்து மேள-தாளத்துடன் ஆதரவாளர்கள் குத்தாட்டம் போட்டு புடைசூழ பலர் ஆர்வத்துடன் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்ததை காண முடிந்தது.
இதையொட்டி ஒன்றிய அலுவலகத்தின் நுழைவு வாயிலில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். கூட்டமாக வந்தவர்களை தடுத்து நிறுத்தி வேட்புமனு தாக்கல் செய்பவருடன் 4 பேர் என மொத்தம் 5 பேரை மட்டுமே உள்ளே அனுப்பி வைத்தனர். அவர்களது விவரங்களை போலீசார் சேகரித்து வைத்து கொண்டனர். இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு மனு தாக்கல் செய்யும் விதமாக ஒன்றிய அலுவலகங்களில் தனிஅறை ஒதுக்கீடு செய்யப்பட்டு வேட்புமனுக்கள் பெற தேர்தல் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அந்த அலுவலகம் மட்டும் வெறிசோடிய நிலையிலேயே காணப்பட்டது.
மேலும் ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறப்படும் இடங்கள் உள்ளிட்டவை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. வட்டார வளர்ச்சி அதிகாரி தனது அலுவலகத்தில் உள்ள கணினி மூலம் வேட்புமனுக்களை பெறப்படுவதை கண்காணித்து வருகிறார். மேலும் குறைந்தது 10 சிற்றூர்கள் சேர்ந்தது தான் ஒரு கிராம ஊராட்சியாக உள்ளது. எனவே கிராமப்புறங்களில் ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி தாங்களாகவே முன்வந்து ஜனநாயகத்துக்கு விரோதமாக ஏலம் மூலம் கிராம ஊராட்சி தலைவரை தேர்வு செய்து வைப்பது, பணம் பட்டுவாடா போன்ற நடத்தை விதிகளை மீறிய செயல்கள் ஏதும் அரங்கேறுகின்றனவா? என தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story