தேன்கனிக்கோட்டை அருகே, ஆபத்தான பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் - கூடுதல் பஸ்கள் இயக்க பெற்றோர் கோரிக்கை


தேன்கனிக்கோட்டை அருகே, ஆபத்தான பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் - கூடுதல் பஸ்கள் இயக்க பெற்றோர் கோரிக்கை
x
தினத்தந்தி 13 Dec 2019 9:45 PM GMT (Updated: 13 Dec 2019 5:21 PM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே பள்ளி மாணவர்கள் பஸ்சில் ஆபத்தான பயணம் செய்து வருகிறார்கள். இப்பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது மேலூர் கிராமம். மலைகிராமமான இப் பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் தேன்கனிக்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு செல்வதற்கு ஒரு அரசு பஸ் தான் உள்ளது. இந்த பஸ்சில் தான் மாணவ, மாணவிகளும், கூலி வேலைக்கு செல்பவர்களும் தினமும் சென்று வருகின்றனர்.

இதன் காரணமாக பஸ்சில் அளவுக்கு அதிகமாக கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். சில மாணவ, மாணவிகள் பஸ்சில் ஏற முடியாமல் தவிக்கின்றனர். மேலும் வேறு பஸ் இல்லாத காரணத்தினால் மாணவ, மாணவிகள் பல கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

இதனால் அவர்கள் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பள்ளி முடிந்த பின்னர் தேன்கனிக்கோட்டையில் இருந்து மேலூர் செல்வதற்கும் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பஸ்சில் ஏற முடியாத மாணவர்கள் 2 மணி நேரம் காத்திருந்து அதன் பின்னர் தான் இரவில் ஊருக்கு செல்ல வேண்டி உள்ளது.

இந்த கிராமம் மலைப்பகுதி என்பதால் இரவில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். இதனால் மாணவர்கள் அச்சத்துடன் இரவில் வீட்டிற்கு செல்கின்றனர். எனவே, மாணவ, மாணவிகளின் நலன்கருதி தேன்கனிக்கோட்டையில் இருந்து மேலூருக்கு பள்ளி கூடுதல் பஸ்கள் இயக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story