சென்னை ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: மாமல்லபுரத்தில் கலெக்டர் ஆய்வு - சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவு


சென்னை ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: மாமல்லபுரத்தில் கலெக்டர் ஆய்வு - சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவு
x
தினத்தந்தி 14 Dec 2019 4:00 AM IST (Updated: 13 Dec 2019 10:53 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சிப்பணிகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது அவர் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பாதுகாக்கவும், சுகாதார வசதிகளை மேம்படுத்தவும் கோரி சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு, மூத்த நீதிபதி கிருபாகரன் கடிதம் ஒன்றை அனுப்பினார். இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்தது.

அப்போது நீதிபதிகள் வினீத்கோத்தாரி, சுரேஷ்குமார் ஆகியோர் விசாரித்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மாமல்லபுரத்தை அழகுபடுத்தவும், புராதன சின்னங்களை பாதுகாக்கவும் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இந்தநிலையில் நேற்று மாமல்லபுரம் வந்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மாமல்லபுரம் சரக காவல் துறை உதவி கண்காணிப்பாளர் சுந்தரவதனம், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. செல்வம், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் சரவணன், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி லதா உள்ளிட்ட அதிகாரிகளுடன் புராதன சின்னங்களை பாதுகாத்தல், சுற்றுலா வளர்ச்சிப்பணிகள், புதிய பஸ் நிலையம் அமைத்தல், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது குறித்து கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, புதிய பஸ்நிலையம் அமைய உள்ள கருக்காத்தம்மன் கோவில் எதிரில் உள்ள மைதானம் போன்ற இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது ஐந்துரதம் பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை நேரில் பார்த்த கலெக்டர் நடைபாதை கடைகளை அகற்ற பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் இ.சி.ஆர். சாலையை ஒட்டி புதிய பஸ்நிலையம் அமைய உள்ள இடத்தையும் உள்ளூர் திட்டக்குழுமம் சார்பில் தயாரிக்கப்பட்ட வரைபடம் கொண்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் கடற்கரைக்கு செல்லும் சாலையை அகலப்படுத்தி, அங்குள்ள கடைகளை மாற்று இடத்தில் அமைத்தல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார். கடற்கரைக்கு செல்லும் பாதையின் பின்புறம் குதிரை ஓட்டுபவர்கள் சிலர் சுற்றுலாத்துறை இடத்தை ஆக்கிரமித்து குடிசை அமைத்துள்ளதை பார்வையிட்ட கலெக்டர் அந்த குடிசைகளை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்த போதிய வாகன நிறுத்துமிட வசதி இல்லாததால் கடற்கரை சாலையில் புல்வெளி மைதானத்தை வாகன நிறுத்துமிடத்திற்கு தேர்வு செய்து விரிவு படுத்தவும் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.

ஆய்வின்போது கலெக்டருடன் திருக்கழுக்குன்றம் தாசில்தார் தங்கராஜ், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் நாராயணன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் மற்றும் தொல்லியல் துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளூர் திட்டக்குழுமம், பேரூராட்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் வந்திருந்தனர்.

Next Story