கூடங்குளம் அருகே பரபரப்பு: ஓடும் பஸ்சில் பயணி திடீர் சாவு - டிரைவர்-கண்டக்டரிடம் போலீஸ் விசாரணை


கூடங்குளம் அருகே பரபரப்பு: ஓடும் பஸ்சில் பயணி திடீர் சாவு - டிரைவர்-கண்டக்டரிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 13 Dec 2019 11:00 PM GMT (Updated: 13 Dec 2019 5:48 PM GMT)

கூடங்குளம் அருகே ஓடும் பஸ்சில் பயணி திடீரென்று இறந்தார். இதுதொடர்பாக டிரைவர், கண்டக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடங்குளம்,

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஆவுடையாள்புரம் மணவாளக்குறிச்சியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 53), தொழிலாளி. இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. எனவே, சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார். அவருடன் மனைவி முத்துலட்சுமியும் உதவிக்கு சென்றார்.

நேற்று காலை திருச்செந்தூரில் இருந்து கடற்கரை கிராமங்கள் வழியாக நாகர்கோவில் செல்லும் அரசு பஸ் ஆவுடையாள்புரத்துக்கு வந்தது. அந்த பஸ்சில் 2 பேரும் ஏறினார்கள்.

இந்த பஸ் இடிந்தகரை கிராமத்துக்கு சென்றபோது நாகராஜனுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். உடனடியாக அந்த பஸ் இடிந்தகரை பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் நாகராஜன் பஸ்சை விட்டு கீழே இறக்கப்பட்டு, பஸ் நிறுத்த நிழற்குடையில் படுக்க வைக்கப்பட்டார்.

அப்போது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதற்கிடையே, நாகராஜன் பயணம் செய்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் நாகராஜனுடன் கீழே இறங்கி நின்றிருந்த பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். நாகராஜனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முயற்சிக்காமல் பஸ்சை ஓட்டிச்சென்று விட்டதாக புகார் தெரிவித்தனர்.

உடனே, இதுகுறித்து அவர்கள் கூடங்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையில் போலீசார் கூடங்குளத்தில் அந்த பஸ்சை தடுத்து நிறுத்தினர்.

இதுதொடர்பாக பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், இடிந்தகரையில் உள்ள ஆஸ்பத்திரியில் நாகராஜனுக்கு சிகிச்சை அளிக்க அழைத்து செல்கிறார்கள் என்று கருதி வந்து விட்டோம் என்று பதில் அளித்து உள்ளனர். இதையடுத்து போலீசார் இடிந்தகரைக்கு சென்று நாகராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கூடங்குளம் பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story